அதானி துறைமுகத்திற்கு எதிரான 138 நாள் போராட்டம் வாபஸ்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து விழிஞ்ஞம் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் சார்பில் வர்த்தக துறைமுகம் அமைக்கும் பணிகள் கடந்த 6 வருடங்களுக்கு முன் தொடங்கியது.  இந்நிலையில் துறைமுகப் பணிகளால் விழிஞ்ஞம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டம் பலமுறை வன்முறையில் முடிந்தது.

இந்நிலையில் போராட்டக் குழுவினருடன் கேரள தலைமைச் செயலாளர் ஜோய் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை போராட்டக் குழுவினருடன் முதல்வர் பினராய் விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 138 நாட்களாக நடந்து வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் யூஜின் பெரேரா கூறினார்.

Related Stories: