×

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் சென்னை வந்தனர்: விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்பு

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர், கொழும்பிலிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை வந்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள், கடந்த நவம்பர் 14ம் தேதி காரைக்கால் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்‌. அப்போது அவர்களின் இயந்திர படகு திடீரென பழுதடைந்து கடலில் நின்றது. மீனவர்கள் அதை பழுது பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்து இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்ததின் பெயரில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியூர் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம், 14 மீனவர்களையும் விடுதலை செய்தது, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

அதிகாரிகள், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 14 மீனவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்றனர். 14 மீனவர்களில், 10 மீனவர்கள் காரைக்கால் பகுதியையும், 3 மீனவர்கள் புதுக்கோட்டை பகுதியையும், ஒரு மீனவர் நாகப்பட்டினம் பகுதியையும் சேர்ந்தவர்கள்.

Tags : Tamil Nadu ,Chennai , 14 Tamil Nadu fishermen freed from Sri Lankan jail arrive in Chennai: officials welcome at airport
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...