மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு துப்பாக்கி, தோட்டாவுடன் சிக்கிய சென்னை வாலிபர்

அவனியாபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்தவர் நிர்மல்பிரபு (26). இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள  நேற்று முன்தினம் வந்தார். திருமணம் முடிந்த பின்னர், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நிர்மல் பிரபுவின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் தோட்டாவுடன் ஒரு துப்பாக்கி (ஏர் கன்) இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து மேல் விசாரணைக்காக, அவனியாபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசார் நிர்மல் பிரபுவிடம் விசாரணை நடத்தினர். வெடிபொருள் கண்டறியும் நிபுணர்கள் சிக்கிய துப்பாக்கி எந்த வகை என சோதனை செய்தனர். இதில், அது ஏர் கன் ரகத்தைச் சேர்ந்த டம்மி துப்பாக்கி என தெரிய வந்தது. அவசரத்தில் தவறுதலாக அதை எடுத்து வந்ததாக நிர்மல் பிரபு தெரிவித்தார். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தில், விமான நிலையத்தில் ஏர்கன்னுடன் வாலிபர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: