×

இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி மேலப்பாளையத்தில் 800 கடைகளும், காயல்பட்டினத்தில் சுமார் 400 கடைகளும் அடைக்கப்பட்டன. பாபர்மசூதி இடிப்பு தினமான இன்று டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த அனைத்து போலீசார் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டனர்.

நெல்லை புதிய பஸ்நிலையம், ரயில் நிலையம், நெல்லையப்பர் கோயில், டவுன் ரதவீதிகள், முக்கிய வழிப்பாட்டு தலங்கள், மேலப்பாளையம் ரவுண்டானா என முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். நெல்லை மாநகரில் மட்டும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். இன்று திருகார்த்திகை தினம் என்பதால் மாநகரில் சொக்கப்பனை கொளுத்தப்படும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை ரயில் நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், தூத்துக்குடி விமான நிலையம், ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் இன்று காலை முதலே பிளாட்பார்ம்களில் ரோந்து வந்தபடியே இருந்தனர்.

சந்தேகப்படும்படியான நபர்களை நிறுத்தி டிக்கெட், செல்லும் இடம் உள்ளிட்டவைகள் குறித்து விசாரித்தனர். இருப்பு பாதைகள், பாலங்களிலும் சுற்றி வந்து சோதனையில் ஈடுபட்டனர். ரயில்நிலையத்தில் மோப்பநாய் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும்  இச்சோதனையில் ஈடுபட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நெல்லையில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமையிலும், நெல்லை மாவட்டத்தில் எஸ்பி சரவணன், தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன், தென்காசி மாவட்டத்தில் எஸ்பி கிருஷ்ணராஜ் ஆகியோர் தலைமையிலும், துணை போலீஸ் கமிஷனர்கள், ஏஎஸ்பி, டிஎஸ்பி, உதவி போலீஸ் கமிஷனர்கள் போன்ற உயர் அதிகாரிகள் முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி கண்காணித்தனர். இன்று பாபர்மசூதி இடிப்பு தினம் என்பதால் மேலப்பாளையத்தில் 800 கடைகள் அடைக்கப்பட்டனர். இதன் காரணமாக மேலப்பாளையம் சந்தை பகுதிகள், பஜார்வீதி, அண்ணா வீதி, அம்பை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் கடைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேலப்பாளையத்தில் வேன், ஆட்டோக்களும் ஓடவில்லை. பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு சந்தை ரவுண்டானாவில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமுமுக சார்பில் இன்று மாலை 4 மணிக்கு மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு பேட்டை மல்லிமால் தெருவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

நெல்லை மாவட்டம் பத்தமடையில் சுமார் 50 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கூலக்கடை பஜார், பஸ்-ஸ்டாண்ட், கடற்கரை சாலை மற்றும் மேல நெசவு தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 400 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தமுமுக சார்பில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை 4 மணிக்கு எஸ்டிபிஐ சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Tags : Babarmazidhi Demolition Day ,Gayalapattinam ,Nolla ,Thoothukudi ,South Kasi , Today is Babar Masjid Demolition Day; 1200 shops closed in Melapalayam, Kayalpattinam: Heavy police security in Nellai, Thoothukudi, Tenkasi
× RELATED காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி...