×

தாம்பரம் அருகே மகள் திருமணத்துக்காக ரூ.30 லட்சம் கடன் வாங்கி மோசடி: போலி காசோலை கொடுத்த தாய், மகள் கைது

தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (50). இவருக்கு ரெஜிகுமார் (47) என்ற மனைவி மற்றும் ஜூலி (25) என்ற மகள் உள்ளனர். உதயகுமார், கடந்த 2014ம் ஆண்டு இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகின்றனர்.  ரெஜிகுமார் எல்ஐசி ஏஜென்ட் ஆகவும், ஜூலி சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ரெஜிகுமார்,  மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு அதே பகுதியை சேர்ந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா உட்பட பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார்.

பின்னர்,  ஜூலியின் திருமணம் முடிந்ததும் ரெஜிகுமார் கடனை திருப்பி கொடுக்காததால் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். இதனால் ரெஜிகுமார், கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கியுள்ளார். அவர் கொடுத்த காசோலையை வங்கிக்கு கொண்டு சென்றபோது  போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் ரெஜிகுமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். முறையாக பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த ஜூலிகுமார் திருமண புகைபடத்துடன் செக் மோசடி கும்பல் என வீட்டின் சுவற்றில் துண்டுநோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதையடுத்து ரெஜிகுமார், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதாக கூறி மோகன், ஜீவரத்தினம், கவிதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். இதனால் சேலையூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த மோகன், ஜீவரத்தினம், கவிதா மற்றும் ரெஜிகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்த சிலர் நேற்று மாலை கிழக்கு தாம்பரத்தில் மீன் வாங்குவதற்காக வந்த ரெஜிகுமாரை வழிமறித்து  வாங்கிய கடனை தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து எந்த பிரச்னையாக இருந்தாலும் காவல் நிலையம் வந்து தீர்த்துகொள்ளுங்கள் என கூறி அழைத்து சென்றனர். அவர்களிடம்  நடத்தப்பட்ட விசாரணையில், ரெஜிகுமார் மற்றும் ஜீலி ஆகியோர் திருமணத்திற்காக பலரிடம் 30 லட்சம் வரை கடன் பெற்று போலி காசோலைகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tambaram , Fraud by taking loan of Rs 30 lakh for daughter's wedding near Tambaram: Mother and daughter arrested for giving fake cheque
× RELATED தாம்பரம் குப்பைக் கிடங்கில் தீ விபத்து..!!