×

வேலூரில் தொடரும் அவலம் பாலாற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவு, குப்பைகள்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் பாலாறு கட்டிட கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருவதால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாறு. மேலும் விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகிறது. இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக்கொண்டு, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், நீர்பாசன வசதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில், பாலாற்றில் ஆக்கிரமிப்பு, இரவு-பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள், கட்டிட கழிவுகள் ஒருபுறம் என்றால், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர் மற்றொரு புறம்.

இதனால் தற்போது பாலாறு, பாழாறாக மாறி வருகிறது. இந்நிலையில், வேலூர் முத்து மண்டபம் பகுதியில் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து கட்டிட கழிவுகளை குவியல் குவியலாக கொட்டுவிட்டு செல்கின்றனர். இதேபோல் புதிய பஸ்நிலையம் அருகே புதிய அண்ணா மேம்பாலம் அருகே மாநகராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கொட்டும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் பாலாறு மேலும் மாசு அடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணத மழைக்காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஆறுதல் அளித்த நிலையில், தற்போது குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் நிரம்பிய பாலாறாக மாறி வருவது பொதுமக்களுக்கு வேதனை அளித்து வருகிறது. இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vellore , Vellore: Vellore Palaru is becoming a dumping ground for construction waste, demand to stop it.
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...