×

தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல: ஐகோர்ட் நீதிபதி கருத்து

சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாடப்பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் பாடப்பிரிவை முடித்த பிறகு, பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்ததாலும் மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்திற்கான இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டார். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்றும் தெரிவித்தார். இடஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட தகுதியானவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, தற்போது ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரிக்கு சென்று படித்தவர்கள் இல்லை என்பது வேதனைக்குரியது என்று கூறினார்.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27வது இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி, கல்விக்கு 36,895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்  நிலையில், பெருந்தொகை ஆசிரியர்களின் ஊதியத்திற்கே செலவிடப்படுகிறது என்று குறிப்பிட்டார். நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களே ஆசிரியர்களாக நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லூரியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : iCourt , Distance Education, Teaching Job, Eligibility, iCourt Judge
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு