மேயர் எச்சரிக்கையை மீறி அண்ணா பஸ் நிலையத்துக்குள் நிறுத்தப்படும் பைக்குகள்-பயணிகள் பெரும் அவதி

நாகர்கோவில் : நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்குள் பைக்குகள் குவிந்ததால், பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் தவித்தனர்.நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலையம் மாவட்டத்தின் மிக முக்கியமான பஸ் நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையத்தில் காலை முதல் இரவு வரை பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். முகூர்த்த நாட்கள் மற்றும் வேலை நாட்களில் வழக்கத்தை விட அதிக பயணிகள் வந்து செல்கிறார்கள். முகூர்த்த நாட்களில் அண்ணா பஸ் நிலையத்தில் அதிகளவில் பெண்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.

பஸ் நிலையத்தில் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்புகள் கூடாது என்று மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். அவ்வப்போது அவரே நேரடியாக ஆய்வு செய்து பிளாட்பாரத்தில் வியாபாரிகள் பொருட்கள் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி வருகிறார்.மேலும் பஸ் நிலையத்துக்குள் பைக்குகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் நிறுத்த கூடாது என்று எச்சரித்துள்ளார். இதை போக்குவரத்து போலீசார் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் மேயரின் இந்த உத்தரவை முறையாக யாரும் கடைபிடிப்பதில்லை. அண்ணா பஸ் நிலையத்தை வாகன பார்க்கிங் பகுதியாக மாற்றி வருகிறார்கள். நேற்று முன் தினம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் கூட பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இது மட்டுமின்றி மீனாட்சிபுரம் செல்வதற்காக பைக்குகளில் பலர் அதி வேகமாக, பஸ் நிலையத்துக்குள் சீறி பாய்ந்த வண்ணம் சென்றனர். இதனால் பயணிகள் மிரண்டு போனார்கள். எனவே பஸ் நிலையத்துக்குள் பார்க்கிங் செய்வதை தடை செய்வதுடன், பஸ் நிலையத்துக்குள் அதி வேகமாக செல்லும் பைக்குகளையும் தடை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டமிடும் கும்பல்

முகூர்த்த நாட்களில் திருமண நிகழ்ச்சிக்காக செல்லும் பெண்கள் அதிகளவில் நகைகள்  அணிந்து செல்கிறார்கள். இதை நோட்டமிட்டு கைவரிசை காட்ட திருட்டு கும்பலும், சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சந்தேகப்படும் படியான வட மாநில கும்பலும், சுற்றி திரிகிறார்கள். தமிழகத்தில் வட மாநில கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் அதுவும் நாகர்கோவிலில் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் சுற்றி திரிவது சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே காவல்துறை இதை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: