பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் மணக்கும் பானை தயாரிப்பு பணி விறுவிறு-கிடாரிப்பட்டியில் தொழிலாளர்கள் தீவிரம்

அழகர்கோவில் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அருகே கிடாரிப்பட்டியில் பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, தைத்திருநாளில் ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் மகத்தான பண்டிகையாக பொங்கல் உள்ளது. பொங்கல் பண்டிகை என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது மண் பானையாகும்.

மதுரை அழகர்கோவில் அருகே உள்ள கிடாரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுந்தர்ராஜன்பட்டி பகுதியில் மட்டுமே 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தயாரிக்கும் மண்பானைகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பானைகளை கிடாரிப்பட்டி பானை என்றே மக்கள் கேட்டு வாங்குகின்றனர். அந்தளவிற்கு திறன்மிக்கதாக இப்பகுதி மண் வளமையுடன் இந்த பானை நன்கு உழைக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக பானைகள் தயாரிப்பு பணி வேகமடைந்துள்ளது.

மண்பாண்ட தொழிலாளி பெருமாள் (70) கூறும்போது, ‘‘55 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலில் உள்ளேன். கண்மாயில் மண் எடுத்தப் பிறகு காய வைத்து பக்குவப்படுத்தி பல்வேறு நிலைகளை கடந்து இந்த பானை வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 50 பானைகள் செய்கிறோம். ஆனால் முழு வடிவம் கொடுக்க 4 நாட்கள் ஆகும். பானையை செய்து அதனை பக்குவமாக தட்டி, வெயிலில் காயவைத்து விற்பனைக்கு அனுப்புகிறோம்.

 தற்போது நவீனமாக இயந்திரங்கள் வந்தாலும், கையில் செய்வது போல் அமையாது. பொங்கல் சீசன் விரைவில் ஆரம்பம் என்பதால் மண்பானை விற்பனை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எங்கள் பகுதியில் தயாராகும் மண் பானைகள் கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பொங்கல் பானை, சித்திரை, வைகாசி, கோடை மாதங்களில் தண்ணீர் பானை மற்றும் மண் விளக்குகளையும் தயார் செய்கிறோம். அது போக சமையல் பானைகள், கலயம் உள்ளிட்டவைகளும் செய்து விற்பனை செய்கிறோம்.

பொங்கலுக்கு இன்னும் 41 நாட்களே உள்ளதால், இப்போதைக்கு ஆர்டர் எடுத்து செய்யத் துவங்குகிறோம். 14 முதல் 16 நாட்களில் செய்து கொடுத்து விடுவோம். பொங்கல் பானையை பொருத்த வரை அரைப் படி முதல் இரண்டரை படி வரையிலான பானைகள் செய்கிறோம்.

 அதே போல் வெயில் சீசன் காலங்களில் தொடங்கி விட்டால் மண் பானைகளின் தேவை அதிகமாக இருக்கும். மண் பானையில் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதால், மண் பானைகளுக்கும், பொருட்களுக்கும் வரவேற்பிருக்கிறது. இந்த தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மழை காலங்களில் அரசு எங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை நிவாரணம் வழங்கி வருகிறது. இத்தொகையை உயர்த்தித்தரவும், எங்கள் பகுதியில் சூளைகள் அமைத்து தரவும், மண் எடுப்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கவும் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார்.

Related Stories: