×

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் அம்பேத்கர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் புகழாரம்..!!

சென்னை: இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் ட்விட்டர் வாயிலாகவும் தலைவர்கள் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்த வகையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமத்துவத்தை நோக்கிய போராட்ட பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்:

இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாளை ஒட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு. ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையுடையதே இந்தியா என்னும் சிந்தனையை விதைத்த பெருந்தகைமையாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்:

அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பின் தந்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தி, பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலன் உட்பட பல்வேறு துறைகளில் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Puttulaka Buddha Ambedkar ,Chief Minister ,Mukherr K. Stalin ,Mb ,President ,Kamalhasan , Oppressed People, Revolution, Ambedkar, Prime Minister M. K. Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...