×

அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலை மகாதீபம்..!

திருவண்ணாமலை: திருக்கார்த்திகையை ஒட்டி, அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாத நிலை இருந்தது. எனவே, இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் தீபத்திருவிழா நடக்கிறது.

எனவே, மகாதீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். இந்நிலையில், அண்ணாமலையார் திருக்கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர். பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இன்று மாலை மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.55 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக 4,500 கிலோ தூய நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

மகா தீபத்தை முன்னிட்டு, தீபம் ஏற்றுவதற்கான புதிய கொப்பரை, மலை உச்சிக்கு நேற்று காலை கொண்டு சேர்க்கப்பட்டது. அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீப கொப்பரையை திருப்பணி ஊழியர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மலை மீது சிறப்பு பூஜைகளுடன் தீப கொப்பரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மகாதீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடை கொண்டதாகும். 2,500 பக்தர்களுக்கு மட்டும் புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் அனுமதி அட்டை வழங்கப்படும்.

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முதல் வரும் 8ம் தேதி வரை 63 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நகரையொட்டி, 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், வேன் போன்றவை நிறுத்த 59 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 5 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Annamalaiyar Temple , Bharani Deepam was lit in Annamalaiyar Temple early this morning: Mala Mahadeepam..!
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...