×

மாஜி மகளிரணி தலைவி குற்றச்சாட்டு சென்னை பாஜ தலைமை அலுவலகம் குண்டர்கள் கையில் சிக்கி தவிக்கிறது: அண்ணாமலைக்கு அனுப்பிய வீடியோ வைரல்

திருவாரூர்: சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் குண்டர்களின் கையில் சிக்கி தவித்து வருவதாக திருவாரூர் மாவட்ட மாஜி மகளிர் அணி தலைவி, மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா ஆதனூர் மண்டபம் பகுதியில் வசித்து வருபவர் சுதந்திராதேவி. சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், திருவாரூர் மாவட்ட பாஜ மகளிர் அணி தலைவியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வரை பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் குண்டர்களின் கையில் சிக்கி தவித்து வருவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, அவர் மூலம் பேசப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், முன்னாள் மாவட்ட தலைவியான சுதந்திராதேவி கமலாலயம் குறித்த சில தகவல்களை கூறியுள்ளார்.”கமலாலயம்  வரும் பெண்களை விரட்டி அடிப்பது மட்டுமின்றி கை ஓங்குவது வரையில் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து உங்களது (அண்ணாமலை) பர்சனல் செகரட்டரி ஸ்ரீகாந்திடம் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளேன். உங்களை சந்திப்பதற்கு நீங்கள் அப்பாயின்மென்ட் கொடுத்தாலும், கமலாலயத்தில் பணியாற்றி வரும் லோகநாதன் லஞ்சம் பெற்றுக் கொண்டு தேவையானவர்களை மட்டும் உள்ளே அனுப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதையும் மீறி பார்க்க வேண்டும் என்று கூறினால் எதற்கு தலைவரை பார்க்க வேண்டும். என்ன காரியமாக பார்க்க வேண்டும் என ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு கடைசியில் சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவருக்கு தகவல் தெரிவித்து பார்க்க விடாமல் செய்து வருகிறார். இதற்கு அவர் பெருமளவில் கையூட்டும் லஞ்சமும் பெற்று வருவது மட்டுமின்றி கமலாலயமானது தற்போது தடியர்கள், அடியாட்கள், குண்டர்கள் கையில் சிக்கி தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி பள்ளியை போன்றும், கமலாலயம் செயல்படுகிறது. எனவே இன்று முதல் பாரத மாதா கி ஜே என்று சொல்வதைவிட, எனது தாய்க்கு ஜே என்று சொல்வதை பெருமையாக கருதிக்கொள்கிறேன். பெற்றோர்கள் தான் முதலில் உரியவர்கள். அதற்கு பின்னர் தான் கடவுள் கூட”. இவ்வாறு அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai Baja ,Maji Maharani ,Annamalai , Ex-Mahalirani leader accuses Chennai BJP head office in hands of thugs: Video sent to Annamalai goes viral
× RELATED வடமாநில நபர்களின் வாக்குகளை...