×

ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே 2.26 லட்சம் பேருக்கு ஆன்லைன் மூலம் எல்.எல்.ஆர்

சென்னை: ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் கடந்த 7 மாதங்களில் ஆன்லைன் மூலம் 2.26 லட்சம் பேர் எல்.எல்.ஆர் எடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 2021-22ம் ஆண்டிற்கான போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்.டி.ஓ) நேரில் செல்லாமல் நேரடி தொடர்பு இல்லாத போக்குவரத்து சேவைகளை வழங்கும் விதமாக எல்.எல்.ஆர், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் ஆன்லைன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மோட்டார் வாகனச்சட்டத்தில் திருத்தம் செய்து போக்குவரத்து தொடர்பான ஆவணங்களை பெற நேரடி தொடர்பு இல்லாத சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் www.parivahan.gov.in என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களும், இந்த சேவையை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக போக்குவரத்து தொடர்பான ஆவணங்களை பெற்றுவந்தனர்.

மேலும், இதன்மூலம் தொடர்பு இல்லாத சேவை, செயல்முறைகளை தடையின்றி செய்வது, ஆர்.டி.ஓக்கள் லஞ்சம் தொடர்பான புகார் உள்ளிட்டவைகள் களைய இந்த சேவை என்பது தொடங்கப்பட்டது. கடந்த ஏப்ரல்.12ம் தேதி முதல் நவ. 20ம் தேதி வரை கடந்த 7 மாதங்களில் ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு செல்லாமல் 2.34 லட்சம் விண்ணப்பதாரர்கள் போக்குவரத்து ஆவணங்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பழகுநர் ஓட்டுநர் உரிமம் (எல்.எல்.ஆர்)- 2.26 லட்சம் பேர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் - 5,185 பேர், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் - 2,224 பேர், உரிமம் மாற்றம் - 28 பேர் உள்ளிட்ட 2.34 லட்சம் விண்ணப்பதாரர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக போக்குவரத்து ஆவணங்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : RTO , 2.26 lakh LLR through online without visiting RTO offices in person
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...