மணலி புதுநகர் ஆண்டார்குப்பம் சந்திப்பில் சாலையில் நிறுத்தப்படும் கனரக லாரிகள்: விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

திருவொற்றியூர்: வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், ஆண்டார்குப்பம், மணலி புதுநகர் போன்ற பகுதியிலிருந்து வரும் மாநகர பேருந்துகள், கன்டெய்னர் லாரி, கார், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் பொன்னேரி நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் ஆண்டார்குப்பம் சந்திப்பில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் சர்வீஸ் சாலையில் ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பைக், ஆட்டோ போன்ற வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்ல முடியாமல், பிரதான சாலையில் செல்கின்றன. அது மட்டுமின்றி ஒரு சில லாரிகள் நாள்கணக்கில் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவதோடு, லாரிகளை பழுது பார்ப்பது, பஞ்சர் ஒட்டுவது போன்ற பணிகளும் சர்வீஸ் சாலையிலேயே நடப்பதால் பொதுமக்கள் பிரதான சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதனால், அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலையில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என்று வாகன ஓட்டிகள் சார்பில் மணலி போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘இந்த பகுதில் பார்க்கிங் யார்டுகள் உள்ளன. இங்கு வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் தர வேண்டும் என்பதற்காக லாரி ஓட்டுனர்கள், சாலை ஓரங்களில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், பைக்கில் வரக்கூடியவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பது தெரியாமல் பின்னால் வரக்கூடிய பைக், கார் போன்ற வாகனங்கள், லாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இதை கண்டு கொள்வதில்லை.

மேலும் பொன்னேரி நெடுஞ்சாலை ஆண்டார்குப்பம் சந்திப்பில் உள்ள சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதும் வளைவில் திரும்புவதும் கட்டுப்பாடு இல்லாமல் செல்கின்றனர். மேலும் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு எந்த விதியும் முறைகளும் இல்லை. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் ஆண்டார்குப்பம் சந்திப்பு பகுதியில் சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும். பாதசாரிகள் நடப்பதற்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் வெள்ளை நிற கோடுகளை போட்டு அங்கே சிக்னல் செயல்படுத்த வேண்டும். அதிக அளவில் பொதுமக்கள் நடப்பதால் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: