×

வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தொங்கு பாலத்தை ஐஐடி நிபுணர் குழு பரிசோதனை: 15 நாளில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தொங்கு பாலத்தை ஐ.ஐ.டி நிபுணர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை குடிநீர் வாரியம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தன்வசம் 11.50 ஏக்கர் இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள 27.50 ஏக்கர் இடத்தை சீரமைப்பு பணிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைத்தது. ஏற்கனவே, இந்த ஏரியின் ஆழம் 1 மீட்டர் மட்டுமே இருந்தது.

சீரமைப்பு பணியை தொடர்ந்து 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும், இங்கு நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையிலேயே முதன்முறையாக வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்ணாடி தொங்கு பாலம் ரூ.8 கோடி செலவில் 250 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக ஏரியில் இதுபோன்ற கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 2 பேர் அருகருகே நடந்து செல்லும் வகையில் அகலமாக உள்ளது. பாலத்தில் நடந்து சென்றபடி பொதுமக்கள் வில்லிவாக்கம் ஏரியின் அழகை ரசிக்க முடியும். மேலும் கண்ணாடி அடிவாரம் வழியாக தண்ணீரையும் பார்க்க முடியும். இந்த பாலத்தின் வழியாக 500 பேர் சென்றாலும் தாங்கக்கூடிய உறுதி கொண்டது.

ஆனாலும் பாதுகாப்பு கருதி ஒரே நேரத்தில் 100 பேர் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்களின் எடை மற்றும் அவர்களால் ஏற்படும் அசைவுகள், குலுங்குதல் ஆகியவற்றை கணக்கிட்டே ஒரே நேரத்தில் 100 பேரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 150 மீட்டர் கண்ணாடி பேனல் உள்ளது. ஏரி மட்டத்தில் இருந்து 4 மீட்டர் உயரம் கொண்டது. இந்த தொங்கு பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஐ.ஐ.டி.யின் இன்ஜினியரிங் துறையை சேர்ந்த 50 மாணவர்களுடன் இணைந்து கண்ணாடி தொங்கு பாலத்தின் உறுதி தன்மையை பரிசோதித்தனர். தங்கள் ஆய்வறிக்கையை இன்னும் 15 நாட்களில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த கண்ணாடி தொங்கு பாலம் வருகிற மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : IIT ,Glass ,Bridge ,Williwakkam Lake , IIT Expert Panel Test of Glass Suspension Bridge on Williwakkam Lake: Paper Submission in 15 Days
× RELATED பராமரிப்பு பணிக்காக கண்ணாடி மாளிகை, புல் மைதானம் மூடல்