சட்டீஸ்கர் வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 நக்சல்கள் சடலம் மீட்பு: 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்

பிஜப்பூர்: சட்டீஸ்கர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 4 நக்சல்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அங்கிருந்து இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் மிர்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்ரா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு, நக்சல் கும்பலை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நக்சல்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து  பிஜாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஆஞ்சனே கூறுகையில், ‘நக்சலைட்டுகளிடம் இருந்து மீட்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளில் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கார்பைன் காலிபர் 30எம்1 துப்பாக்கியும் அடங்கும். இது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஆயுதத்தால் ஒரே நேரத்தில் 15 முதல் 20 ரவுண்டுகள் சுட முடியும். அமெரிக்க வீரர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்த ஆயுதம், இவர்களிடம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இந்த ஆயுதம் 1938-1941ம் ஆண்டுக்கு இடையில் டேவிட் மார்ஷல் வில்லியம்ஸால் வடிவமைக்கப்பட்டது. 1942 முதல் 1973ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. முன்னதாக, நாராயண்பூரில் நடந்த என்கவுன்டரில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) கூட்டு நடவடிக்கையின் மூலம் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என்றார்.

Related Stories: