×

ஒன்றிய அரசுப் பணியில் 27% இடஒதுக்கீடு இருந்தும் ஓபிசி-யில் 20% ஏன்?... பணியாளர் துறை ஆண்டறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இருந்தும் அவர்கள் ஒன்றிய அரசுப் பணியில் 20 சதவீதம் என்ற அளவிற்கே பணியில் உள்ளதாக ஒன்றிய அரசின் பணியாளர் துறை அமைச்சக ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணியாளர் துறை அமைச்சகம் சமீபத்தில் ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி, ஒன்றிய அரசின் 55 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 20.43 சதவீதம் மட்டுமே உள்ளது.

ஆனால் அவர்களுக்கு அரசியலமைப்பின் இடஒதுக்கீட்டின்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டை விடக் குறைவாகவே பணியில் உள்ளனர். எஸ்சி - எஸ்டி வகுப்பினரை பொறுத்தவரை, ஒன்றிய அரசுப் பணியில் 15 சதவீத இடஒதுக்கீடு பெறுகின்றனர். தற்போது 17.39 சதவீத பணியாளர்கள் பணியில் உள்ளனர். அதேபோல் 7.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பழங்குடியின வகுப்பினர் 7.64 சதவீதம் பேர் பணியில் உள்ளனர். இந்த புள்ளி விபரங்களின்படி பார்த்தால், ஓபிசி பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை காட்டிலும் அவர்களின் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமலும், காலியாகவும் உள்ளன.

ஓபிசி பிரிவினர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒன்றிய அரசு அவ்வப்போது அறிவிப்பாணைகளை வெளியிட்டாலும் கூட, அரசுப் பணியில் சேருவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவர்கள் இடஒதுக்கீட்டின் முழு பலனையும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 1993ம் ஆண்டு ஓபிசி இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அதனால் முப்பது ஆண்டுகளாக ஓபிசி பிரிவில் பணியாளர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஒன்றிய அரசின் பணியாளர்கள் விபரத்தில், பழங்குடியின வகுப்பினர் - 3,95,712 பேர், ஓபிசி வகுப்பினர் - 1,47,953 பேர், அட்டவணைப்படுத்தப்பட்ட வகுப்பினர் - 3,36,927 பேர், பொது மற்றும் இதர பிரிவினர் - 10,56,504 பேர் என, மொத்தம் 19,37,096 பேர் ஒன்றிய அரசுப் பணியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : OBC ,Union Govt , Despite 27% reservation in Union Govt jobs why 20% in OBC?... Information in Personnel Department Annual Report
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...