×

சத்துணவு திட்டத்தில் இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்துணவுத் திட்டத்தின் முதன்மையான நோக்கங்களில் குறிப்பிடத்தக்கது மாணவர்களுக்கு சூடான உணவை, சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும் என்பது தான். பள்ளி வளாகத்தில் சமைத்து வழங்குவதன் மூலம் மட்டும் தான் இந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியும். உணவை சூடாக உட்கொள்ளும் போது அது செரிமானத் திறனை அதிகரிக்கிறது. உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது.

ஓரிடத்தில் சத்துணவு தயாரித்து 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் போது, உணவு தயாரிக்கப்படும் பள்ளியைத் தவிர மற்ற இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள் மூடப்படும். அந்த பள்ளிகளில் உணவு வழங்கும் பொறுப்பு பள்ளியில் பணியாற்றும் ஏதேனும் ஒரு பணியாளரிடம் ஒப்படைக்கப்படலாம். அதனால் அங்கு பணியாற்றிய சத்துணவு அமைப்பாளரும், சமையலர்களும் வேலை இழக்க நேரிடும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 43,190 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் உள்ளன.

அவற்றில் சுமார் 1.29 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் 28,000 சத்துணவு மையங்களை மூட வேண்டிய நிலை உருவாகும். அதனால், சுமார் 85,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படும். சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இருந்தால் அதை சமூக நலத்துறை கைவிட வேண்டும். சத்துணவுத் திட்டம் இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என்று அரசு அறிவிக்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Anbumani , Current status of nutrition program should continue: Anbumani insists
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...