×

வத்தலக்குண்டு அருகே ஊரைச்சுற்றி ஆறுகள்: வறண்டு கிடக்கும் கண்மாய்-வைகைநீர் கொண்டுவர கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் மூன்று ஆறுகளின் தண்ணீர் செல்கிறது. இருப்பினும் இங்குள்ள கண்மாய் வறண்டு கிடக்கிறது. எனவே வைகை நீரை இந்த கண்மாய்க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரியுள்ளனர்.வத்தலக்குண்டு அருகே உள்ளது விராலிப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது.

அந்த கோயிலருகே காணப்படும் பெரிய கண்மாய் வறண்ட நிலையில் உள்ளது. விராலிப்பட்டியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். மழை காலங்களில் ஓரளவு தண்ணீர் போதுமானதாக இருந்தாலும், வெயில் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் தடைபடுகிறது. இதனால் நல்ல விவசாய நிலங்கள் தரிசாக மாறுகிறது. ஒரு சில சமயத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுகிறது.

இதன்படி 4 கி.மீ தூரத்தில் பழைய வத்தலக்குண்டுவில் மஞ்சளாறு தண்ணீர் வந்து அங்குள்ள 2 கண்மாய்கள் நிரம்புகிறது. இங்கிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள குள்ளப்புரம் கண்மாய்க்கு சோத்துப் பாறை அணை தண்ணீர் வந்து நிரம்புகிறது. அடுத்ததாக 3 கி.மீ தூரத்தில் வைகையாறு செல்கிறது. அதன் அருகிலேயே வைகை அணையிலிருந்து கள்ளந்திரி செல்லும் சிமென்ட் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இப்படி சுற்றியே வைகை நீர், மஞ்சளாறு நீர், சோத்துப் பாறை அணையிலிருந்து வரும் தண்ணீர் பயன்பாட்டில் உள்ள நிலையில் விராலிப்பட்டி மட்டும் குட்டி பாலைவனமாக காட்சியளிக்கிறது.

இந்த ஊரில் உள்ள பல விவசாயிகள் கூலி வேலைக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது. தண்ணீர் இல்லாததால் சொந்த நிலத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு செல்லும் விவசாயிகள் தங்கள் ஊர் கண்மாய்க்கு அருகிலுள்ள பூவம்பட்டி கிராமத்திலிருந்து வைகை கால்வாய் தண்ணீரை விராலிப்பட்டி கொண்டுவர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். உயர் அதிகாரிகளும் இது நியாயமான கோரிக்கை என்றும், எளிதில் செயல்படுத்தி விடலாம் என்றும் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.இருப்பினும் இதுதொடர்பான பணிகள் நடைபெறவில்லை.

இதையடுத்து விவசாயிகள் மதுரைக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இத்திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றும், இனியும் காலந்தாழ்த்தாமல் திட்ட பணியை விரைவாக துவக்கி விராலிப்பட்டி மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கியிட வேண்டுமென்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மன் கூறுகையில், “ நாடெல்லாம் வெள்ளக்காடாக கிடக்கிறது. எங்கள் ஊர் கண்மாயில் மீன்கள் நீந்த வேண்டிய நேரத்தில் அங்கு வளர்ந்திருக்கும் புற்களை மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களின் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்தும் தமிழக அரசு இத்திட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்.

Tags : Vathalakundu ,Kanmai ,Vaikai , Vattalakundu : The waters of three rivers flow around Viralipatti village near Vattalakundu. However here
× RELATED பொன்னமராவதி அருகே கொன்னைக் கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலம்