பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்-சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

ஊட்டி : பாலியல்  குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 குறித்து  அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் ஊட்டியில் நடந்தது. சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்றார். நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம்  ஆய்வு மாளிகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்  சட்டம் - 2012 குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் நிர்வாக  நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை  நீதிபதி முருகன், மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாராயணன், மாவட்ட  கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட  அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்குகள் பற்றிய  புள்ளி விவரங்கள்  குறித்து காவல்துறை மூலம் விளக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நல  அலுவலகம், சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை பணியாளர்களால் பள்ளி இடை  நிற்றல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை பாதுகாப்பு  குறித்து வழங்கப்பட்ட விழிப்புணர்வு குறித்த விவரங்கள் பற்றி விளக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யும்  போது ஏற்படும் பிரச்னைகள், வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய  நடைமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. பின்னர் ஆதிவாசி மக்கள் அதிகம்  உள்ள பகுதிகளில் மாணவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி  தரவும், பாலியல் வழக்குகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைந்து நிவாரண  நிதி பெற்று தரவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி.,  ஆசிஷ் ராவத், இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் தமிழினியன், குற்றவியல்  நீதிமன்ற நடுவர் ஸ்ரீதரன், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம், கொம்மு ஓம்காரம்,  முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் வித்யா, அருண், மாவட்ட வருவாய்  அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷோபனா, மாவட்ட சமூக நல அலுவலர்  பிரவீணா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி  மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: