×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாகப்பட்டினத்தில் 25 ஜோடிகளுக்கு வைதீக முறைப்படி திருமணம்-நீலாயதாட்சியம்மன் கோயிலில் நடந்தது

நாகப்பட்டினம் : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட 25 ஜோடிகளுக்கு வைதீக முறைப்படி நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோயிலில் திருமணம் நடந்தது.கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் முகம்மதுஷாநவாஸ், நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 25 ஜோடிகளுக்கு வைதீக முறைப்படி தனித்தனியாக சிவாச்சாரியார்கள் அமர்த்தப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடத்தி திருமணம் நடத்தி வைத்தனர். காலை நேரத்தில் பொங்கல், வடை, பூரி, இட்லி, கேசரி ஆகியவற்றுடன் மதியம் அப்பளம், வடை, பாயாசத்துடன் தடல்புடல் ஆக திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது. ஜோடிகளுக்கு 47 வகையான சீர் வரிசை பொருட்கள், 2 கிராம் தாலி, மணமகன் மற்றும் மணமகள் உடைகள் வழங்கப்பட்டது. திருமணம் முடிந்து செல்லும் அனைவருக்கும் தேங்காய், லட்டு கொண்ட தாம்பூல பை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசுகையில்:

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினங்கள் அனைத்தும் இந்து சமயம் மற்றும் அறநிலைய கொடைகள் சட்ட பிரிவின் கீழ் நிதிமாற்றம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதியை முதல்வர் அளித்து ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதில் திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி, பித்தளை காமாட்சி விளக்கு, படி, குங்குமசிமிழ், பித்தளை குத்துவிளக்கு மற்றும் சமையல் பாத்திரங்கள் அடங்கிய 47 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த மணமக்கள் அனைவரும் வாழ்க்கையில் விட்டு கொடுத்து சிறப்புடன் வாழ வேண்டும்.

கணவனிடம் மனைவி தோல்வி அடைய வேண்டும். அதேபோல் மனைவியிடம் கணவன் தோல்வி அடைய வேண்டும். இவ்வாறு எதார்த்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகராட்சி தலைவர் மாரிமுத்து, நாகப்பட்டினம் ஒன்றிய குழு தலைவர் அனுசுயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் ராணி, திருவாரூர் மாவட்ட உதவி ஆணையர் மணவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Hindu Religious Charities Department ,Nilayadatsiyamman ,Nagapattinam , Nagapattinam: On behalf of Hindu Religious Charities Department, 25 couples under Nagapattinam Joint Commissioner Zone according to Vedic method.
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...