சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை-பயணிகள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு :  சேத்தியாத்தோப்பு புதிய பேருந்துநிலையத்திற்குள் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலக கட்டுபாட்டில் புதிய பேருந்துநிலையம் இருந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்குள் தினசரி அனைத்து பேருந்துகளும் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் சென்றது. ஆனால் தற்போது பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லாததால் பயணிகள், வர்த்தக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பேருந்து நிலையத்தில் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்ததுதான். இதன் காரணமாக பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு உள்ளே வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து பயணிகள் நலன்கருதி பேருந்துநிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் கொரோனா காலகட்டமான கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா இடர்பாடுகளால் வணிகர்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வாடகை செலுத்த முடியாமல் கடுமையான நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது ஒரு சில பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளும் பேருந்துநிலையத்திற்குள் சென்றுவராமல் ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியோடு திரும்பி சென்றுவிடுகிறது. இதனால் பயணிகள் மற்றும் வர்த்தக வியாபாரிகள் பேருந்து நிலையத்துக்கு வரமுடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

எனவே பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரியும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதியும், வர்த்தக வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் அனைத்து பேருந்துகளும் பேருந்துநிலையத்திற்குள் வந்து செல்ல தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: