×

மரக்காணம் பறவைகள் சரணாலய பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு-முழு வீச்சில் பணிகளை செயல்படுத்த உறுதி

மரக்காணம் :  மரக்காணம் பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதியில் நடந்து வரும் பணிகள் குறித்து அமச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாயில் 5 ஆயிரத்து 151 ஹெக்டர் பரப்பளவில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படுமென சட்டசபையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சரணாலயம் அமையவுள்ள இடத்தில் வனத்துறை சார்பில் காடுகள் வளர்த்தல் போன்ற முதல் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை வனத்துறை அமைச்சர்  ராமச்சந்திரன், சிறுபான்மைநலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இரண்டாவது பெரிய சதுப்பு நிலப் பகுதியாக விளங்குகிறது.  இந்த பறவைகள் சரணாலயம் அமைய உள்ள இடத்தை சுற்றிலும் 13 கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமப்புறங்களில் 750 க்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் இருக்கின்றன. மழைக்காலத்தில் இங்குள்ள ஏரிகள் நிரம்பினால் மிகுதியான தண்ணீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்கு செல்கிறது.
தமிழ்நாட்டில் 15 பறவைகள் சரணாலயத்தோடு, மரக்காணம் 16வது சரணாலயமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவிலேயே தேவாங்குகளுக்கு தனியாக தமிழகத்தில் ஒரு சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதிக்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையில் சீனா, ரஷ்யா மலேசியா, இலங்கை  உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவையினங்கள் வருகின்றன. இப்பறவையினங்கள் இங்கு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து, மீண்டும் தங்களது நாடுகளுக்கே சென்று விடுகின்றன.

இதனை விரிவுபடுத்த ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு உள்ளோம்,  நிதி கிடைத்தவுடன் இந்த பறவைகள் சரணாலயம் முழு வீச்சில் சிறப்பாக செயல்படுத்தப்படும். இப்பறவைகள் சரணாலயம் செயல்பாட்டுக்கு வந்தால், இப்பகுதி சுற்றுலா வளர்ச்சி பெறும் என்றார். ஆய்வின் போது, வனத்துறை அலுவலர் மாரிமுத்து, விழுப்புரம் மாவட்ட வனத்துறை அலுவலர் சுரேஷ் சோமன், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், துணை சேர்மன் பழனி, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மரக்காணம் வட்டாட்சியர் சரவணன், திண்டிவனம் வனக்காப்பாளர் அஸ்வினி மற்றும் நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Marigold Bird , Marakanam: Officials inspected the ongoing work in the area where the Marakanam Bird Sanctuary is located.Villupuram
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.