×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியினர் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், அதிமுக சார்பில், ஜெயலலிதா படத்தை வைத்து மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதிமுகவினர் 3 அணிகளாக பிரிந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழகமெங்கும் இருந்து தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர்.

இதனால் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் பெண்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். நீங்கா நினைவில் ஜெயலலிதா உள்ளதாக தொண்டர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர். கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜெ.நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரனும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags : Former ,Chief Minister ,Jayalalithaa ,Edappadi Palaniswami ,Marina , Tribute to Jayalalitha, Memorial Day, Marina, Edappadi Palaniswami
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...