×

சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல்: இரும்பு வியாபாரி ஓடஓட வெட்டி படுகொலை

சென்னை: கஞ்சா விற்பனை குறித்து இரும்பு வியாபாரி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததால், ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் ஒன்று சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். அவர்கள் பெரியமேடு அல்லிக்குளம் வளாகத்தில் அந்த இரும்பு வியாபாரியை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக, கூலிப்படையை சேர்ந்த 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு ஏ.எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(37). இவர் பெரியமேடு அல்லிக்குளம் பஜாரில் பழைய இரும்பு கம்பிகளை விற்று வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். முனுசாமி மற்றும் அவரது மாமியார் கடைகள் முன்பு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாசர்பாடி எம்ஆர்.நகரை சேர்ந்த ரவுடி மணிகண்டன்(எ) புளிமூட்டை மணி(27) என்பவர் செல்போன் உதரிபாகம் கடை போட்டுள்ளார். இதனால் முனுசாமிக்கும் ரவுடி மணிகண்டனுக்கும் இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், மணிகண்டன் செல்போன் உதரிபாகம் என்ற பெயரில் தன் கடையில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனுசாமி பெரியமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தாராம். இதையடுத்து ரவுடி மணிகண்டனை போலீசார் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டன் கூட்டாளிகளான கொடுங்கையூர் அஷ்ரப் அலி(28), புளியந்தோப்பு கே.பார்க் அப்பாஸ்(28), அப்பி(எ) ஆப்பிரகாம்(20), கிஷோர்(27) ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்னர். அப்போது தான் கஞ்சா விற்பனை குறித்து இரும்பு வியாபாரி முனுசாமி போலீசாருக்கு  தகவல் கொடுத்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடி மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் முனுசாமியை கொலை செய்ய அல்லிக்குளம் பஜாருக்கு வந்துள்ளார். அப்போது முனுசாமி தனது இரும்பு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல வெளியே வந்தார். அப்போது ரவுடி மணிகண்டன் தனது நண்பர்களுடன் முனுசாமியை நான்குபுறமும் சூழ்ந்து சரமாரியாக வெட்டினர். இதனால், உயிர் தப்ப முனுசாமி நடத்திய போராட்டம் வீணானது. ஆனால், மணிகண்டன் தனது நண்பர்களுடன் ஓட ஓட விரட்டிச் சென்று முனுசாமியை வெட்டி படுகொலை செய்தார். அவர் இறந்ததை உறுதி செய்த பிறகே, அவர்கள் தயாராக இருந்த ஆட்டோ மூலம் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியமேடு போலீசார், இரும்பு வியாபாரி முனுசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு திருவள்ளூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்ம பபி மற்றும் எஸ்ஐ சுரேஷ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்த போது, ஆட்டோவில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவில் மது போதையில் ரத்தக்கறைகளுடன் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அல்லிக்குளம் வளாகத்தில் இரும்பு வியாபாரி முனுசாமியை கொலை செய்துவிட்டு திருவள்ளூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை பார்க்க ஆட்டோவில் வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் ரவுடி மணிகண்டன்(எ) புளிமுட்டை மணி 4 பேரையும் பிடித்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி பெரியமேடு போலீசார் மணிகண்டன், அப்பாஸ், அஷ்ரப் அலி, ஆபிரகாம் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ஆட்டோவில் இருந்து தப்பி ஓடிய கிஷோரை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்திகள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Chennai ,Allikulam complex , Sale of ganja, information to police, iron dealer, murder
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!