வெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட்: 164 ரன் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி; பந்துவீச்சில் லயன் அசத்தல்

பெர்த்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 164 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. பெர்த் ஸ்டேடியத்தில் நவ.30ம் தேதி தொடங்கி நடந்து வந்த முதல் டெஸ்டில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 598 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவாஜா 65, லாபுஷேன் 204, ஸ்மித் 200*, ஹெட் 99* ரன் விளாசினர்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 315 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸி. 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன் என்ற ஸ்ல்கோருடன் மீண்டும் டிக்ளேர் செய்தது. வார்னர் 48, லாபுஷேன் 104*, ஸ்மித் 20* ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 498 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்திருந்தது.

நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 333 ரன்னுக்கு ஆட்டமிழந்தது (110.5 ஓவர்). கேப்டன் பிராத்வெய்ட் 110, தேஜ்நரைன் சந்தர்பால் 45, ரோஸ்டன் சேஸ் 55, அல்ஜாரி ஜோசப் 43 ரன் எடுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன் 42.5 ஓவரில் 128 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஹெட் 2, ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி 164 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. லாபுஷேன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் 8ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: