சட்டீஸ்கரில் கொல்லப்பட்ட நக்சலைட்டிடம் அமெரிக்க துப்பாக்கி பறிமுதல்

ராய்ப்பூர்: என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்டிடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கி இருந்தது பாதுகாப்பு படையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் போம்ரா வனப்பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒரு துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்1 கார்பைன் நவீன ரகத்தை சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கியின் வரிசை எண்ணை வைத்து, இது எப்படி நக்சலைட்களுக்கு கிடைத்தது என்பது பற்றி பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு ரவ்கட் பகுதியில் கொல்லப்பட்ட நக்சலைட்களிடம் இருந்து அமெரிக்க துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்களிடம் இருந்து ஜெர்மனி துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: