×

அதானி துறைமுகங்களுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் சுரண்டப்படும் மீன், கடல் வளம்: போராடுபவர்கள் மீது தாக்குதல்

‘உலகின் 3வது பணக்காரர், ஆசியாவின் நம்பர் 1, இந்தியாவின் முதல் கோடீஸ்வரர்’. இந்த பெருமைக்கு சொந்தக்காரர் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரும், பிரதமர் மோடிக்கு மிக நெருங்கிய நண்பருமான கவுதம் அதானிதான். எல்லா துறைகளிலும் கோலோச்சும் இவர், சரக்குகளை அதிகம் கையாளும் முக்கிய துறைமுகங்களை அடுத்தடுத்து வாங்கி விரிவாக்கம் செய்து வருகிறார். இதனால் பரம்பரை பரம்பரையாக மீன்பிடி தொழில் செய்து வரும் லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இவருடைய துறைமுகங்களால்  மீன் வளம், மண் வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். துறைமுகத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. வழக்குகளும் போடப்படுகிறது.  

கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள விழிஞ்ஞத்தில், கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் ரூ.7,700 கோடி மதிப்பில் சரக்கு பரிமாற்ற வர்த்தகத் துறைமுகத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதில் ரூ.4854 கோடி கேரள அரசும், ரூ.2454 கோடி அதானி குழுமமும், ரூ.818 கோடி ஒன்றிய அரசும் முதலீடு செய்கிறது. இதற்காக, கேரள அரசு 320 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளது. இதில் 130 ஏக்கர் கடலிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த துறைமுகத்தால் கடல் அரிப்பு, வீடுகள் பறிபோனது, அடுத்தடுத்து மீனவர்கள் பலி உள்ளிட்ட காரணங்கள் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் மீனவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. விழிஞ்ஞம் போலீஸ் நிலையமும் சூறையாடப்பட்டது. போலீசார் தாக்கப்பட்டனர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக கத்தோலிக்க பிஷப் தாமஸ் ஜெ. நெட்டோ மற்றும் 50 பாதிரியார்கள் உட்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுக பணியால் மீன்பிடி தொழில் அழியும், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று மீனவர்கள் கூறினாலும், ‘யார் என்ன வேஷத்தில் வந்து போராட்டம் நடத்தினாலும் விழிஞ்ஞம் துறைமுகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட மாட்டாது. குறிப்பிட்ட நேரத்தில் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

சென்னை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்தை எல் & டி நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு அதானி குழுமம் கடந்த 2018ம் ஆண்டு 99 ஆண்டுக்கு குத்தைக்கு எடுத்து உள்ளது. இதை வாங்கியதுமே, இந்த காட்டுப்பள்ளியை மிக்பெரிய துறைமுகமாக மாற்றுவோம் என்று அதானி குழுமம் அறிவித்தது. ஏற்கனவே உள்ள 336 ஏக்கர் நிலம் தவிர துறைமுக விரிவாக்கத்துக்கு மொத்தம் 5,780 ஏக்கர் நிலம் தேவை என்று கூறுகிறது அதானி நிறுவனம். இது போதாதென்று கடலில் 6 கிலோ மீட்டருக்கு கற்கள், பாறைகள், மண் கொட்டி 1967 ஏக்கர் பரப்புளவு தளம் உருவாக்கப்போகிறார்கள். இத்திட்டத்திற்கு காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரப் பொதுமக்கள், மீனவர் குடும்பங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

காட்டுப்பள்ளி கடல், சேற்றுத் திட்டுகளைக் கொண்ட, நீர் ஆழம் குறைவான பகுதி ஆகும். இங்குதான் அதிகமான இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்ற கடல் உணவுகள் அதிகம் கிடைக்கின்றன. கடலில் மண் கொட்டி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து, ஆபிரகாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிக்குப்பம் உள்ளிட்ட 82 தமிழக ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கடல் அரிப்பால் பழவேற்காட்டில் கடல் நீர் உட்புகுதல் மேலும் அதிகரிக்கும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குப் பாதிக்கும். பழவேற்காடு பகுதி 160 வகையான மீன்கள், 25 வகையான மிதவை புழுக்கள் ஆகியவை உற்பத்தியாகும் இடமாகத் திகழ்கின்றது. இங்கு, நூற்றுக்கணக்கான பறவை இனங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் உள்ள உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே துறைமுக விரிவாக்கத்தால் அழியும்.

இவ்வளவு எதிர்ப்பு, போராட்டங்கள் நடத்தினாலும், மீனவர்களின் நலன் கருதி மாற்று திட்டத்தை யோசிக்காமல் அதானி குழுமத்துக்கு ஒன்றிய அரசு தூணாக நிற்கிறது. போராட்டம் நடைபெறும் அதானி துறைமுகங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களை காக்க வேண்டிய ஒன்றிய அரசு, ஒரு தனிநபரை பாதுகாத்து வருகிறது. இதனால் கொதித்து எழுந்து உள்ள மீனவர்கள், ‘ஓட்டுக்கு நாங்க... நோட்டுக்கு அவரா...’ என கேள்வி எழுப்பி உள்ளனர்.

மக்கள் வரி பணத்தில் சம்பாதிக்கும் அதானி
விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, அதானி குழுமத்திடம் 40 ஆண்டுகள் குத்தகைக்கு கேரள அரசு கொடுக்கிறது. 2015ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. 2030ம் ஆண்டு முதல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கேரள அரசிற்கு வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் கொடுக்க வேண்டும். 2030ம் ஆண்டு வருமானத்தில் ஒரு சதவீதம் வழங்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் ஒரு சதவீதம் வீதம் அதிகரிக்கும். 2055ம் ஆண்டு ஆகும்போது இது 25 சதவீதமாகும். அதன் பின்னர் துறைமுகம் கேரள அரசின் முழு கட்டுப்பாட்டில் வரும். இந்த துறைமுகத்துக்கு பெரும் பகுதி கேரள அரசு (மக்கள் வரி பணம்) போடுகிறது. ஆனால், சம்பாதிப்பதோ அதானி. யாருடைய பணத்தை யார் சாப்பிடுவது?

மீனவர்களுக்காக ஒரு ரூபாய்
கூட செலவு செய்யவில்லை
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜாய் ஜெரால்ட் கூறுகையில், ‘தொடக்கத்தில் நாங்கள் துறைமுகம் வேண்டாம் என்று கூறவில்லை என்பது உண்மைதான். விழிஞ்ஞம் துறைமுகம் வந்தால் கேரளா, சிங்கப்பூராக மாறும். மலேசியா ஆகிவிடும் என்று கூறினர். அதனால்தான் துறைமுகத்திற்கு நாங்கள் சம்மதித்தோம். துறைமுகத்தால் வருங்காலத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் 7 ஆண்டுகள் ஆன பிறகும் மீனவர்களுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. வாழ்வதற்காக போராடும் நாங்கள் தேச துரோகிகள் அல்ல. தலைவர்கள் தான் தேச துரோக செயலில் ஈடுபடுகின்றனர்’ என்று தெரிவித்தார்.

அனுமதிக்க மாட்டோம்
விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு எதிராக போராட்டத்தை முன் நின்று நடத்தி வரும் பாதிரியார் யூஜின் பெரேரா கூறுகையில், ‘கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட 350 மீனவர் குடும்பத்தினர் நீண்ட காலமாக குடோன்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை வீடு எதுவும் கட்டிக் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் வழங்குவது போல மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். முதலைப்பொழி உட்பட பல இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மீனவர்கள் பலியாகி விட்டனர். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் எதையுமே இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் எந்தக் காரணம் கொண்டும் துறைமுகத்தை செயல்பட அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.

சேர, சோழ அரசர்கள் போர் செய்த துறைமுகம்
கடல் பகுதி மிகவும் ஆழமுள்ளதாக இருப்பதால் பண்டைய காலத்திலேயே விழிஞ்ஞசம் ஒரு துறைமுக நகராக இருந்தது. கிபி முதலாம் நூற்றாண்டில் வெளியான ‘Periplus of the Erythraean sea’ என்ற புத்தகத்தில் விழிஞ்ஞம் துறைமுகத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சேர, சோழ அரசர்கள் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து போர் செய்ததாக வரலாறு கூறுகிறது. போர்த்துக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் இந்த துறைமுகம் வழியாகத்தான் தங்களது நாட்டு சரக்குகளை இந்தியாவுக்கு விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

ஒட்டுமொத்தமாக தாரைவார்க்க புதிய மசோதா
நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கு துறைமுகங்கள் வரைவு மசோதாவை 2022 ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பல்வேறு மாநிலங்களில் துறைமுகத்துக்கு நிலத்தை வழங்கி உள்ள மாநில அரசின் நிலைமை காலி. தற்போது, துறைமுக பணிகளில் மாநில அரசிடம் கேட்டுதான் ஒன்றிய அரசு முடிவெடுத்து வருகிறது. மசோதா நிறைவேறினால், யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. இது நடந்தால், நாட்டில் உள்ள மற்ற துறைமுகங்களும் அதானி கைக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

2024ல் விழிஞ்ஞம் துறைமுகம் இயங்கும்
விழிஞ்ஞம் துறைமுக நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ‘விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு தேவையான 2 முக்கிய அம்சங்களுமே விழிஞ்ஞம் பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ளது.  மீனவர்களுடன் ஆலோசித்த பிறகே, துறைமுகப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த துறைமுகம் வருவதால் கேரளா மட்டுமில்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். தற்போது 60 முதல் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 2024ம் ஆண்டுக்குள் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து துறைமுகத்தின் செயல்பாடு தொடங்கிவிடும்.

துறைமுகத்திற்காக 360 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், மீனவர்களிடமிருந்து நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை. நிலத்திற்கு சராசரியாக ஒரு சென்டுக்கு ரூ.6 லட்சம் வரையும், ஏக்கருக்கு ரூ.6 கோடி வரையும் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு இழந்தவர்களுக்கு நிலத்திற்கான பணம் தவிர ரூ.5 லட்சம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை வழங்கியவர்களுக்கு துறைமுக கட்டுமானப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்த உள்ளூர்வாசிகளுக்கு பணி வழங்கும் வகையில் துறைமுகப் பணிகளில் பயிற்சி கொடுப்பதற்காக ரூ.60 கோடி செலவில் பயிற்சி மையமும் அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

யாருக்கும் நிரந்தர பணி கிடையாது
காட்டுப்பள்ளி துறைமுகத்தால், நிலத்தை இழந்த காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த 140 குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலை அந்த துறைமுகத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், காட்டுப்பள்ளி, காலாஞ்சி சேர்ந்த 70 பேருக்கு என மொத்த 210 பேருக்கு வேலை தரப்பட்டுள்ளது. இவர்கள் வேலை நிரந்தரம், சம்பள உயர்வு, விடுமுறை ஆகிய கோரிக்கைகளை கேட்டு தொடர் போராட்டம் நடத்தினர்.

இருப்பினும், 2009, 2014, 2017, 2019, 2022 என ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் புதுப்பித்து ஒப்பந்தம் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. துறைமுகம் ஒட்டி உள்ள பழவேற்காட்டை சேர்ந்த கூனம்குப்பம், அரங்கம் குப்பம், திருமலை நகர், வைரவன் குப்பம், சாத்தான் குப்பம் உள்ளிட்ட 15 கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், சுமார் 1500 பேர் வேலை கேட்டனர். அவர்களில் 250 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்து உள்ளது. மொத்தம் 2,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிலையில், நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு இதுவரை நிரந்தர பணி
வழங்கவில்லை.

அதானி கால் பதித்தது எப்படி?
வரலாறு சிறப்பு மிக்க விழிஞ்ஞ்சத்தில் ஒரு நவீன துறைமுகம் கட்ட வேண்டும் என்று ஆங்கிலேயர் காலத்திலேயே ஒரு திட்டம் உருவானது. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி விழிஞ்ஞத்தில் ஒரு துறைமுகம் அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். ஆனால் அப்போது அந்தத் திட்டம் நடைபெறாமல் போனது. இதன்பின் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் விழிஞ்ஞத்தில் ஒரு நவீன துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் இந்த துறைமுகத்தை அமைக்க அப்போது இருந்த அரசு தீர்மானித்தது.

இதற்கான ஆய்வுகளை கேரள அரசு தொடங்கியது. ஒரு சீன நாட்டு நிறுவனம் இங்கு துறைமுகத்தை அமைக்க அப்போது முன்வந்தது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு அப்போது ஒன்றிய அரசு அனுமதி வழங்கவில்லை. அதன்பின் லான்கோ என்ற நிறுவனம் துறைமுகத்தை அமைக்க முன்வந்தது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டர் நடவடிக்கைகளை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தாலும் விழிஞ்ஞம் துறைமுக திட்டத்தை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் அதானி குழுமம் விழிஞ்ஞத்தில் காலடி எடுத்து வைத்தது. கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் அதானி குழுமத்துடன் துறைமுகத்திற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது
விழிஞ்ஞம் துறைமுக பாதுகாப்புக்காக கடல் சுவர் எழுப்புவதற்கு மட்டும் 80 லட்சம் டன் பாறாங்கல் தேவைப்படும். பாறாங்கல் எடுப்பதற்கான அனுமதி மூலம் மட்டுமே அதானிக்கு பல கோடி லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல், காட்டுபள்ளி துறைமுகத்துக்காக கடலில் 6 கிலோ மீட்டருக்கு கற்கள், பாறைகள், மண் கொட்டி 1967 ஏக்கர் பரப்புளவு தளம் உருவாக்கப்போகிறார்கள். இதற்காக தேவைப்படும் பாறைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளை குடைந்து எடுத்து வரப்படுகிறதாக கூறப்படுகிறது. மணலும் கொள்ளையடிக்கப்படுகிறது. இவ்வாறு பாறைகள் எடுத்து வந்து துறைமுகம் அமைத்தால், மேற்கு தொடர்ச்சி மலையே இல்லாமல் போய்விடும். இந்த மலையால்தான் தமிழகம், கர்நாடகா, கேரளா வளமாக இருக்கிறது. இதை கபளீகரம் செய்தால், மூன்று மாநிலங்களும் பாலைவனமாகி விடும்.

கனவிலும் நினைத்து பார்க்காத வளர்ச்சி
* நடுத்தர குடும்பத்தில் பிறந்து ஜவுளி தொழிலில் தொடங்கி அனைத்து  துறைகளிலும் கோலோச்சி, இன்று நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் அதானி குழுமம்  முக்கிய பங்கு வகிக்கிறது.
8 ஒன்றியத்தில்  பாஜ ஆட்சி அமைந்த பிறகுதான், இவரது நிறுவனத்தின் வளர்ச்சியும், அதானி  என்கிற தனி நபரின் வளர்ச்சியும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத  அளவுக்கு  உள்ளது.
* இந்தியாவில் கையாளப்படும் ஒட்டுமொத்த சரக்கில் 25% அதானி குழும நிறுவனங்கள் கவனித்து கொள்கிறது.
* அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், 6 நிறுவனங்கள் மட்டும் இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிட்டிருக்கிறது.
* இந்த ஆறில் 5 நிறுவனங்கள் இந்தியாவில் டாப் 30 நிறுவனங்களில் இடம் பிடித்திருக்கின்றன.
* அதானி போர்ட்ஸ் & எஸ்.இ.இசட், அதானி என்டர்பிரைசஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய 6 நிறுவனங்கள்தான் அதானி குழுமத்தின் டாப் நிறுவனங்கள்.
* நிறைய வியாபாரங்கள் செய்தாலும் அதானி சாம்ராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது அவரது துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்தான்.

Tags : Adani , Adani port, burning protest, attack on protestors
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...