×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தல்: மெஸ்சி மேஜிக்கால் காலிறுதியில் கால் பதித்தது அர்ஜென்டினா

தோகா:  உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாட உள்ளது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றின் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது.

இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி முக்கிய வீரர் டீ மரியாவை களமிறக்கவில்லை. அர்ஜென்டினா vs ஆஸ்திரேலியா இந்த ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆனால் அர்ஜென்டினா அணியின் பலத்தை கணித்து ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனிடையே மெஸ்ஸிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொல்லையை ஏற்படுத்தினர். இதன் காரணமாக 34வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு, ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

ஃபீரி கீக் வாய்ப்பில் பந்தை பாஸ் செய்து, மீண்டும் பாக்ஸ் பகுதிக்குள் சென்று 6 வீரர்களை கடந்து மெஸ்ஸி கோல் அடித்தார். இதுவரை 5 உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடியுள்ள மெஸ்ஸியின், முதல் நாக் அவுட் கோல் இதுவாகும். இதன் மூலம் மெஸ்ஸியின் நாக் அவுட் சாபம் முடிவுக்கு வந்தது. அதேபோல் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தோடு களமிறங்கினர்.

ஆனால் 57வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கோல்கீப்பர் மேட் ரியான் செய்த தவறால், அர்ஜென்டினா அணி ஆல்வரஸ் இரண்டாவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் அதிகமாக இருந்தது. இதன் பலனாக 77வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் குட்வின் அடித்த பந்து அர்ஜென்டினா அணி ஃபெர்னான்டஸ் காலில் பட்டு சொந்த கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் பரபரப்பானது.

தொடர்ந்து 80வது நிமிடத்தில் ஆஸி. அணியின் அஷிஷ் 5 அர்ஜென்டினா வீரர்களை டிரிபிள் செய்து கொண்டு வந்த பந்தை 6வது வீரர் வந்து தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வர, கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா அணி மூன்றாவது கோலை அடிக்க அட்டாக் மேல் அட்டாக் செய்தது. ஆனால் அர்ஜென்டினா அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

கடைசியாக ஒரு நிமிடம் இருக்கும்போது ஆஸ்திரேலியா அணி எதிர்பாராத ஒரு அட்டாக்கை மேற்கொண்டது. கிட்டத்தட்ட கோலாக மாற வேண்டிய நிலையில், அர்ஜென்டினா கோல்கீப்பர் மார்ட்டினஸ் தடுத்து நிறுத்தினார். பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. வரும் 10ம் தேதி நடக்கவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி வலிமையான நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Australia ,Messi ,Argentina , Amazing match against Australia: Messi's magic puts Argentina in the quarter-finals
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை