×

சோழிங்கநல்லூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி கைது: 6 காஸ்ட்லி பைக் பறிமுதல்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் டிபன் கடை உரிமையாளரை வழிமறித்து தாக்கி, அவரது செல்போன் மற்றும் பணத்தை பறித்த தேடப்படும் குற்றவாளியை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 விலையுயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (41). இவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் டிபன் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க சோழிங்கநல்லூர் கே.கே.சாலை வழியாக, ஈஞ்சம்பாக்கம் நோக்கி மாணிக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர், மாணிக்கத்தை வழிமறித்து தாக்கினார். பின்னர் அவரை கத்திமுனையில் மிரட்டி, மாணிக்கத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இப்புகாரின்பேரில் செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை சோழிங்கநல்லூர், குமரன் நகர் சிக்னலில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவரது பெயர் தமிழ்செல்வன் (எ) செல்வா (30) எனத் தெரியவந்தது. மேலும் இவர், கடந்த அக்டோபர் 14ம் தேதி மோட்டார் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். பின்னர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நாள்தோறும் தமிழ்செல்வன் கையெழுத்திட்டு வந்ததும், கடந்த சில நாட்களாக கையெழுத்து போட வராமல் தலைமறைவானதும் தெரியவந்தது.

மேலும், சோழிங்கநல்லூரில் டிபன் கடை உரிமையாளர் வழிமறித்து தாக்கி செல்போன், பணத்தை பறித்ததாக தமிழ்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து நடத்தி விசாரணையில் துரைப்பாக்கம், பெரும்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பைக் திருட்டு, கடைகளை உடைத்து கொள்ளை, கத்திமுனையில் வழிப்பறி ஆகிய குற்றச்செயல் ஈடுபட்டு வந்ததும், ஒரு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி என்பதும் தெரிந்தது.

தமிழ்செல்வனிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 6 விலையுயர்ந்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தமிழ்செல்வனுக்கு உடந்தையாக இருந்த அசோக் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



Tags : Cholinganallur , Cholinganallur robbery suspect arrested: 6 castely bikes seized
× RELATED சட்டசபையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ...