×

அதிகாரிகளின் ஆய்வைத் தொடர்ந்து புதுப்பொலிவு பெற்ற 100 ரேஷன் கடைகள்; 200கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

சேலம்: சேலம் மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகள் நவீனமாக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும், 200 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை, மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் 2 கோடியே 23 லட்சத்து 74 ஆயிரத்து 842 ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த ரேஷன் கடைகள் செயல்படும் கட்டிடங்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு வசதி குறைபாடுகள் கண்டறியப்பட்ட நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ரேஷன் கடைகளை நவீனமயமாக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடையும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்குள்ள வசதிகள், பொதுமக்களின் மனநிலை உள்ளிட்டவை ஆராயப்பட்டது. அந்த ஆய்வில், 2 ஆயிரத்து 929 ரேஷன் கடைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டது. இதில் 2,895கடைகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தேர்வும் செய்யப்பட்டது. இந்த கடைகளில் பழுது பார்த்தல், தரைத்தளம் சீரமைப்பு மற்றும் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐஎஸ்ஓ தரச்சான்று அளிக்கும் அதிகாரிகள் குழுவினர், கூட்டுறவு ரேஷன் கடைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், கட்டிடத்தின் தரம், பொருட்கள் சேமிப்பு, விற்பனை, இருப்பு மற்றும் பதிவேடு பராமரித்தல் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டு அனைத்து ஆய்வுகளும் திருப்தியளித்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டு வருகிறது.
 
மேலும், ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புராதன சின்னங்கள், திருவள்ளுவர் படம் வரைதல் போன்ற தனித்துவமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளை புதுப்பொலிவாக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. முன்மாதிரி ரேஷன் கடையும் கட்டப்பட்டுப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இதுவரை 2,252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 3,662 ரேஷன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளன. சேலம் மாவட்டத்தில் 1600 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 100 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, 200 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளன. ரேஷன் கடை கட்டிடத்தின் தரம், பொருட்கள் சேமிப்பு, விற்பனை, இருப்பு மற்றும் பதிவேடு பராமரித்தல் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட சீரங்கபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், மேட்டூர் டேம் படம் வரையப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற ரேஷன் கடைகளிலும் புராதன சின்னங்கள் வரையப்பட்டுள்ளன. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் 1600 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், 100 கடைகள் புதுப்பிக்கப்பட்டு, அந்த கடைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பூங்கா, மாற்றுத்திறானாளிகளுக்கென தனிப்பாதை, மழைநீர் சேகரிப்பு, வாடிக்கையாளர்கள் அமரும் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கடைகளின் முகப்புகளில் மேட்டூர் டேம், புராதன சின்னங்கள், திருவள்ளுவர் படம் உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக மற்ற கடைகளிலும் புதுப்பிக்கும் பணியும், ஐஎஸ்ஓ தரச்சான்று பெறும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது,’ என்றனர்.  



Tags : I.S. S.S. O. ,Dachacha , 100 ration shops which have been renovated following official inspection; ISO, Quality Certification for 200 shops
× RELATED தச்சை கணேசராஜா பிறந்தநாள் டவுன் சந்தி...