கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருது: அமெரிக்காவில் இந்திய தூதர் வழங்கினார்

வாஷிங்டன்: பத்ம பூஷண் விருதை பெற்ற கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ‘என்னுள் ஓர் அங்கம் இந்தியா’ என கூறி உள்ளார். தமிழகத்தின் மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இதன் மூலம் உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த அவரை கவுரவிக்கும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டிற்கான வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் நாட்டின் உயரிய பத்மபூஷண் விருதை சுந்தர் பிச்சைக்கு ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 பேரில் சுந்தர் பிச்சை ஒருவர். இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், பத்மபூஷண் விருதை சுந்தர் பிச்சை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங்கிடமிருந்து பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுந்தர்பிச்சையின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். விருதை பெற்ற சுந்தர் பிச்சை, ‘‘இந்த மகத்தான கவுரவத்திற்காக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா என்னுள் ஓர் அங்கம். எங்கு சென்றாலும் அதை என்னுடன் நான் எடுத்துச் செல்வேன்’’ என்றார்.

Related Stories: