×

 ‘முதல்வரின் முகவரி’ துறை மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? பொதுமக்களிடம் நேரடியாக பேசி விவரம் கேட்டார் முதல்வர் ஸ்டாலின்: சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு

சென்னை: ‘முதல்வரின் முகவரி’ துறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனுதாரர்களிடம் நேரடியாக பேசி விவரம் கேட்டறிந்தார். பொதுமக்கள் குறைகளை களைவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கென ‘முதல்வரின் முகவரி’ என்ற தனி துறையை உருவாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சரின் தனி பிரிவில் முன்பு, ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது.

தற்போது, அனைத்து குறைதீர் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.மனுக்கள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு, விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார். அப்போது, புதிய முயற்சியாக முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் மாவட்ட ஆட்சியரகங்களில் கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அனைத்து மனுக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தர மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

சரியான முறையில் தீர்வு அளிக்கப்படாத மனுக்களுக்கு மீண்டும் உரிய முறையில் தீர்வு அளிப்பது கண்காணிக்கப்படுகிறது. முதல்வரின் முகவரித்துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து அந்த மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள முதல்வர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மனுதாரர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒரு சில மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் கேட்டறிந்தார்.

நிலுவை ஓய்வூதிய பணப்பயன்கள் தொடர்பாக மனு அளித்திருந்த தேனி மாவட்டம், கம்பம் வட்டத்தை சேர்ந்த என்.ரவி என்பவரை தொடர்பு கொண்டு, அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். மேலும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தை சார்ந்த ஜெயலட்சுமி, சென்னையை சார்ந்த எஸ்.லதா ஆகியோரை தொடர்பு கொண்டு, முறையே அர்ச்சக தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் கல்வி உதவித்தொகை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

மனுக்களை திறம்படவும் விரைவாகவும் தீர்வு செய்த திருச்சி மாவட்டம், முசிறி துணை காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தனி வட்டாட்சியர் ஆகியோரை பாராட்டியும், கோவை மாநகராட்சி உதவி ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு, உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Chief's Address' ,Chief Minister ,Stalin , What is the action taken by the 'Chief's Address' department on petitions? Chief Minister Stalin directly spoke to the public and asked for details: Kudos to the officers for their excellent work
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...