×

காங்கிரஸ் நடைபயணத்தில் பங்கேற்று ராகுலுக்கு வில்-அம்பு பரிசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

பர்வானி: காங்கிரஸ் நடை பயணத்தில் பங்கேற்று ராகுல்காந்திக்கு வில் அம்பு பரிசளித்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் மத்திய பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது, கடந்த மாதம் 24ம் தேதி பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கன்னோஜி, நடைபயணத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது ராகுல்காந்திக்கு வில் அம்பு பரிசளித்து உள்ளார். உடனடியாக அடுத்த நாளே அவரை மாவட்ட கல்வி வாரியம் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து பழங்குடியினர் விவகார துறையின் உதவி கமிஷனர் ரகுவன்சி பிறப்பித்த உத்தரவில், ‘ராஜேஷ் முக்கிய வேலை என விடுப்பு எடுத்துக் கொண்டு நடைபயணத்தில் பங்கேற்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அரசு விதிகளை மீறி அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்’ என கூறப்பட்டுள்ளது. மபியில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

* கம்ப்யூட்டர் பாபாவால் சர்ச்சை
ராகுல் நடைபயணத்தில் நேற்று சாமியார் கம்ப்யூட்டர் பாபா பங்கேற்றார். அப்போது ராகுல் மற்றும் திக்விஜய்சிங்குடன் அவர் பேசிக்கொண்டு நடந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை பா.ஜ தலைவர் நரேந்திரா சலுஜா விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில்,’ கன்கயா குமார், நடிகை ஸ்வரா பாஸ்கர், இப்போது கம்ப்யூட்டர் பாபா.. இது எந்த மாதிரியான ஒற்றுமை யாத்திரை?. கம்ப்யூட்டர் பாபா அரசு நிலத்தை அபகரித்து சிறையில் இருந்தவா். இப்படிப்பட்டவர் எப்படி ராகுலுடன் இணைந்து ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கிறார்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு,’ நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கலாம்’ என்று முன்னாள் அமைச்சர் ராஜ்குமார் பட்டேல் பதில் அளித்து உள்ளார்.

Tags : Congress ,Rahul , School teacher suspended for taking part in Congress walk and gifting bow and arrow to Rahul
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...