நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் அமைப்புக்கு எதிராக துணை ஜனாதிபதி பரபரப்பு பேச்சு: நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் ரத்து செய்யப்பட்டது மிகத் தீவிரமான பிரச்னை’ என கொலிஜியம் அமைப்புக்கு எதிரான துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கு   கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு கொலிஜியத்துக்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கும் நோக்கில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் கூறி இந்த திருத்தத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கிடையே, தற்போது கொலிஜியம் முறைக்கு ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எல்.எம்.சிங்வி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில்  துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசுகையில், “நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. மக்களவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது ஒரு உறுப்பினர் மட்டுமே வாக்களிக்கவில்லை. மற்ற அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இதுபோன்ற ஒரு நிகழ்வு உலகிற்கு புதிது.  தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மிகவும் முக்கிய பிரச்னை. இதுபோன்ற நிகழ்வு வேறு எங்கும் நடந்தது உண்டா என நீதித்துறை உயர் அதிகாரிகள், அறிவார்ந்த நபர்கள் யோசிக்க வேண்டும். மக்களின் விருப்பத்தை நாடாளுமன்றம் பிரதிபலிக்கிறது. நாடாளுமன்றம் மக்களின் தேர்வு மற்றும் மக்களின் ஞானத்தைக் குறிக்கிறது. அதாவது அதிகாரம் மக்களிடம் இருக்கிறது’’ என்றார். துணை ஜனாதிபதியும் கொலிஜியம் அமைப்புக்கு எதிராக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: