மேற்கு வங்கத்தில் வீட்டில் குண்டு வெடித்து 3 பேர் பலி: மம்தா மருமகன் பங்கேற்க இருந்த கூட்டத்தில் பதற்றம்

கன்டாய்: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் பொது செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் மூன்று பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்திற்குட்பட்ட பூபதிநகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தாவின் மருமகனும், கட்சியின் பொது செயலாளர் மற்றும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். இந்நிலையில் மேடை அமைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அருகே இருந்த வீட்டில் இரவு 11.15மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஏதோ வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்து 3 சடலங்களை மீட்டனர். இதில் ஒருவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மேலும் அந்த பகுதியில் இருந்த பலர் காயமடைந்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: