×

ரயில்வே தேர்வை இனிமேல் யுபிஎஸ்சி நடத்துகிறது

புதுடெல்லி: இந்திய ரயில்வே பணியாளர் நியமனத்திற்கான தேர்வானது அடுத்த ஆண்டு முதல் ஒன்றிய பணியாளர் தேர்வு வாரியத்தின் சிறப்பு தேர்வு மூலமாக நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுகளை இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) நடத்தி வருகின்றது. இந்நிலையில் வருகிற 2023ம் ஆண்டு முதல் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வுகள் ஒன்றிய பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கியுள்ள சிறப்பு தனித்தேர்வு மூலமாக நடத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘இந்திய ரயில்வே மேலாண்மை சேவை தேர்வானது முதன்மை தேர்வு, மெயின் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் நடத்தப்படும். 2023ம் ஆண்டில் இருந்து ரயில்வே ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளை ஒன்றிய பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தனித்தேர்வாக நடத்தப்படும். அதாவது சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்ததாக ஐஆர்எம்எஸ் மெயின் எழுத்து தேர்வு எழுதுவதற்கு தகுதி பெறுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பல்வேறு பிரிவினருக்குமான வயது வரம்பு, எத்தனை முறை தேர்வு எழுதலாம் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு உள்ளதை போலவே கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : UPSC , Railway exam will be conducted by UPSC henceforth
× RELATED யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீசஸ் தேர்வு ஒத்திவைப்பு