×

7ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் அவசர ஆலோசனை: கார்கே தலைவரானதால் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு?

புதுடெல்லி: வரும் 7ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கூட்டத்தொடரில் விவாதிக்கக் கூடிய விசயங்கள், ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக இருந்த கார்கே ராஜினாமா செய்ததால், புதியதாக எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்தல் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் நடைபெறும். ஆனால் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தாண்டு டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதன்படி 7ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடரானது, 29ம் தேதி வரை 17 அமர்வுகளாக நடைபெற இருக்கிறது. முன்னதாக கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது மரபாக உள்ளதால், இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நிறைவேற்ற வேண்டிய மசோதாக்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இந்நிலையில், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக வரும் 6ம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி தலைமையில், ெடல்லியில் உள்ள அவரது வீட்டில் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நாட்டின் வேலையில்லாத்  திண்டாட்டம், பணவீக்கம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, உலகளவில் கச்சா  எண்ணெய் விலை குறைக்கப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சாமானிய  மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான அதிகபட்ச ஜிஎஸ்டி  வரிவிதிப்பு போன்ற பிரச்னைகளில் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேற்கண்ட பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸ் தலைவராக  மல்லிகார்ஜுன கார்கே கடந்த அக். 26ம் தேதி பதவியேற்ற பின்னர், முதன்முதலாக நடக்கும் உயர்மட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா காங்கிரஸ் தலைமை  கொறடா ஜெய்ராம் ரமேஷ், லோக்சபா தலைமை கொறடா கே.சுரேஷ், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில் தற்போது காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற கார்கே, ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற திட்டத்தின் கீழ், தனது ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அவருக்கு மாற்றாக ராஜ்யசபாவுக்கு புதிய எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வதா? அல்லது இந்த கூட்டத் தொடரில் கார்கேவே தொடர்வதா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பொது நலன் சார்ந்த பிரச்னைகள்  குறித்து எதிர்க்கட்சியின் வியூகத்தை வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து மாலையில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரமளித்தல், தேர்தல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்தல், தேசிய பல் மருத்துவ ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட மசோதாக்கள் அடங்கும்.

16 புதிய மசோதாக்கள் என்னென்ன?
வரும் 7ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் 16 புதிய மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. அதில், 1948ல் இயற்றப்பட்ட பல் மருத்துவர்கள் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா, 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு, தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. மேலும், பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல், தேர்தல் செயல்முறையைச் சீர்திருத்துதல் உள்ளிட்ட நோக்கத்துடன் மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, கன்டோன்மென்ட் மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா, கடலோர மீன் வளர்ப்பு ஆணைய மசோதா, 1836, 1827, 1838, 1849 மற்றும் 1851ம் ஆண்டின் கவர்னர் ஜெனரல்  ஆணைகளின் கீழ் கொடுக்கப்பட்ட நிலத்தின் பரிமாற்றம், உட்பிரிவு மாற்றம்  உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

Tags : Congress ,Rajyasabha ,Karke , Parliamentary session, urgent consultation by top Congress leaders, Leader of Opposition in Rajya Sabha
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...