×

முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 02.12.2022 அன்று தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும் முதலமைச்சர் இதற்கென “முதல்வரின் முகவரி” என்ற தனித் துறையை உருவாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு அவ்வப்போது முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், முதலமைச்சர் உதவி மையத்திற்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், மனுதாரர் மற்றும் அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொண்டும், கள நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார். முதலமைச்சரின் தனிப்பிரிவில் முந்தைய காலகட்டங்களில், ஆண்டொன்றிற்கு சராசரியாக சுமார் 3 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது, அனைத்து குறைதீர் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்துறையின் வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சர் மாவட்டங்களில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின் போது பெறப்படும் மனுக்கள் மீதும், அவற்றில் தெரிவிக்கப்படும் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவற்றினை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

புதிய முயற்சியாக, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் மாவட்ட ஆட்சியரகங்களில் கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அனைத்து மனுக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தர மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. சரியான முறையில் தீர்வு அளிக்கப்படாத மனுக்களுக்கு மீண்டும் உரிய முறையில் தீர்வு அளிப்பது கண்காணிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வரின் முகவரித்துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து அம்மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு முதலமைச்சர், மனுதாரர்களின் கோரிக்கைகள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ஒரு சில மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். நிலுவை ஓய்வூதிய பணப்பயன்கள் தொடர்பாக மனு அளித்திருந்த தேனி மாவட்டம், கம்பம் வட்டத்தைச் சேர்ந்த என்.ரவி என்பவரை தொடர்பு கொண்டு, மேற்படி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதை கேட்டறிந்து உறுதி செய்தார். மேலும், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தைச் சார்ந்த ஜெயலட்சுமி மற்றும் சென்னையைச் சார்ந்த எஸ்.லதா ஆகியோரை தொடர்பு கொண்டு, முறையே அர்ச்சக தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் கல்வி உதவித்தொகை தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

மனுக்களை திறம்படவும் விரைவாகவும் தீர்வு செய்த திருச்சி மாவட்டம், முசிறி துணை காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தனி வட்டாட்சியர் ஆகியோரை பாராட்டியும், கோயம்புத்தூர் மாநகராட்சி உதவி ஆணையர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பதிவாளர் ஆகியோரையும் தொடர்புகொண்டு, உரிய அறிவுரைகளை வழங்கினார்.

முன்னதாக, முதலமைச்சர் இத்துறையின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்படுகிறதா என்பதை 28.5.2021, 5.10.2021, 26.7.2022 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags : CM ,K. Stalin , Chief Minister's address department, petitions received from the public, Chief Minister's review of activities
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...