அகமதாபாத்தில் நூற்றாண்டு கண்ட தமிழ் பள்ளி மூடப்பட்டுள்ளதால் தமிழ் மாணவர்கள் படிக்க முடியாத நிலை: தமிழை ஒரு பாடமாக கற்பிக்கும் பள்ளியாக மாற்றி திறக்க கோரிக்கை.!

குஜராத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நூறு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழ் பள்ளி கடந்த 2 ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டு இருப்பதால் அங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியமால் தவித்து வருகின்றனர். பள்ளி நடத்துவதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்த போதும் குஜராத் அரசு அதனை ஏற்க மறுப்பதாக கூறும் அகமதாபாத் தமிழர்கள் உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மில் வேலைக்காக குஜராத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெயர்ந்து வந்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்று விரும்பிய அவர்களது குழந்தைகளுக்கு 1990 தொடக்கத்தில் சிலர் மரத்தடியில் பாடம் நடத்தி உள்ளனர். பின்னர், குஜராத்தை சேர்ந்தவர் இலவசமாக குடுத்த இடத்தில் 1910-ம் ஆண்டில் தமிழ் வழி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் குட்டி தமிழ்நாடு என்று அழைக்கப்படும் மணிநகர் உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் வசிப்பதால் சில ஆண்டுகள் இடைவெளியில் தமிழ் வழியில் கற்பிக்கும் 7 ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் மாணவர் சேர்க்கை குறைவு என்பது உட்பட பல்வேறு காரணங்களை கூறி அனைத்து ஆரம்பப்பள்ளிகளும் மூடப்பட்டன.

இருப்பினும் தமிழ்வழி மேல்நிலை பள்ளி மட்டும் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு அதுவும் மூடப்பட்டுவிட்டது.

இதனால், கடைசியாக அந்த பள்ளியில் படித்து வந்த 35 மாணவர்கள் மட்டுமின்றி தமிழ் படிக்க விரும்பும் அகமதாபாத் தமிழர்களின் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பள்ளி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று குஜராத் தமிழ் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து பள்ளியை நடத்துவதற்கு ஆகும் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க முன்வந்தது. இது தொடர்பாக குஜராத் அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மூடப்பட்டு உள்ளதால் தமிழ் மாணவர்களின் எதிர்காலமே கேள்வி குறியாக இருப்பதாக அகமதாபாத் தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மூடப்பட்டுள்ளதால் அந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிக்கப்படும் ஆபத்து இருப்பதாக தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பள்ளி இடிக்கப்படுவதை தடுக்க உடனடியாக தமிழ்வழி பள்ளியை திறக்க வேண்டும் அல்லது தமிழை ஒரு பாடமாக கற்பிக்கும் பள்ளியாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதே அகமதாபாத் தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: