×

ஆதிதிராவிடர், பழங்குடியின ஆணையத்தில் ஆஜராகாத நெல்லை எஸ்பியை கைது செய்ய உத்தரவு

நெல்லை: தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையத்தில் ஆஜராகாத நெல்லை எஸ்பியை கைது செய்ய தென் மண்டல ஐஜிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாளையங்ேகாட்டை அருகேயுள்ள சிவந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன் பரமானந்தம். இவரது நிலத்தை சுற்றி வேலியிட்டு, அவரது குடும்பத்தாரை போக விடாமலும் பயன்படுத்த விடாமலும், அந்நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட பரமானந்தம் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனுக்கு கடந்த ஜூன் மாதம் 10ம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை அவர் பொருட்படுத்தாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி நோட்டீசுக்கு பதில் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதை தெரியப்படுத்தும் அறிக்கையில் நோட்டீசுக்கு பதில் தராவிட்டால் விளைவு என்ன என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட பின்னரும் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன், இவ்வாணையத்தின் அறிவிக்கையை சட்டை செய்யாமல் நோட்டீஸ் அனுப்புவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்ததன் காரணமாக, 27ம் தேதியன்று சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் இவ்வாணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பாணையை பெற்றுக்கொண்ட எஸ்பி, ஆணையத்தின் அணைப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி கடந்த 27-10-22ம் தேதியன்று ஆஜராக தவறி விட்டார்.

அப்போதே அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க கூடும் என்றாலும், மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி கடந்த மாதம் 30ம் தேதியன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகும் போது ஆணையத்தின் அழைப்புகளை அலட்சியப்படுத்தியதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய சட்டத்தின் படி ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணம் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பாணைகளுக்கு பின்னரும் நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் நேரில் ஆஜராக தவறியிருக்கிறார். கடந்த மாதம் 30ம் தேதியன்று ஏடிஎஸ்பி மாரிராஜன் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நெல்லை எஸ்பியின் இத்தகைய செயல் ஆணையத்தின் உத்தரவுகள் தன்னை கட்டுப்படுத்தாது என்ற அவரது கருத்தினை வெளிப்படுத்துவதாகவும் ஆணையத்தில் நேரில் ஆஜராவதை தம்முடைய தகுதிக்கு குறைவானது என கருதுவதாகவும் அமைகிறது.

எனவே தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டத்தின் படி நெல்லை எஸ்பிக்கு ரூ.500 அபராதம் விதித்து ஆணையம் உத்தரவிடுகிறது. மேலும் நெல்லை எஸ்பியை கைது செய்து ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும் 28ம் தேதியன்று ஆஜர்படுத்துமாறு பிணையில் விடக்கூடிய பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. பிடி ஆணை நிறைவேற்ற தென் மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்படுகிறது. அபராத தொகையை விதிமுறைகளை கடைப்பிடித்து வசூல் செய்ய நகலை நெல்லை கலெக்டருக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Adhiravidar ,Tribal Commission , Adi Dravidar, Tribal Commission, Nellie SP, warrant of arrest
× RELATED தமிழ்நாட்டில் பெண்கள் வரலாற்றில் ஒரு...