1924ம் ஆண்டு கட்டப்பட்ட மாயனூர் காவிரி கதவணை கும்பகுழி பாலம் இடிந்தது: வாகனங்கள் செல்ல தடை விதிப்பு

கிருஷ்ணராயபுரம்: மாயனூர் காவிரி கதவணையின் தென்கரையில் 1924ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கும்பகுழி பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் காவிரி ஆற்றின் தென்கரையில் கும்பகுழி பாலம் 1924ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் மணவாசி, ஆர். புதுக்கோட்டை, மாயனூர் பகுதிகளின் மழைநீர் வடிகால் காவிரி ஆற்றில் வந்து சேருகிறது. இந்த பாலம் வழியாக செல்லும் சாலையில் மேலமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை பகுதி மக்கள் சென்று வந்தனர். இந்த கும்பகுழி பாலம் வழியாக கட்டளை செல்லும் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக கிருஷ்ணராயபுரம் யூனியன் சார்பில் பொதுப்பணித்துறையினர் அனுமதியின்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது.

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி மணவாசியில் உள்ளதால் சுங்க கட்டணத்தை தவிர்ப்பதற்காக இரவு நேரங்களில் ஜல்லி, மணல், எம்.சேண்ட் போன்றவை ஏற்றிக்கொண்டு வரும் கனரக வாகனங்களான இந்த பாலம் வழியாக செல்வதால் சாலை மற்றும் பாலம் சேதம் அடைந்து வந்துள்ளது. இதில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பெய்த மழையால் திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. சம்பவம் அறிந்த பொதுப்பணித்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவ்வழியாக வாகனங்கள் சென்றுவர தடை விதிக்கப்பட்டு சாலையின் இரு பகுதியிலும் அறிவிப்பு பலகை வைத்தனர்.

பின்னர் பாலம் இடிந்த பகுதியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தர் தலைமையில் பணியாளர்கள் மூலம் மணல் மூட்டை கொண்டு சீரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணி இன்னும் 4- நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் மேலமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை பகுதி மக்கள் மாயனூர் கதவனை வருவதற்கு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றி தான் வரவேண்டும் என கூறப்படுகிறது. பாலம் இடிந்தது குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிங்காரவேல் நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Stories: