விதிகளை மீறிய நம்பர் பிளேட் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை: விதிகளை மீறிய நம்பர் பிளேட் உள்ள வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், எஸ்.வெள்ளாலபட்டியைச் சேர்ந்த சந்திரசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விதிப்படிதான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர் மூலம் நம்பர் பிளேட்டில் ஒட்டி வருகின்றனர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் பாஜவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். அதிகாரிகளுக்கு அளித்த மனுவில், சட்ட விரோத நம்பர் பிளேட்களை அகற்றும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க மாவட்ட தலைமையுடன் இணைந்து அடுத்த கட்ட நகர்வுகளுக்கு செல்ல வேண்டி வரும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் மனு அளித்துள்ளார்’’ என்றார். அப்போது மனுவை படித்துப் பார்த்த நீதிபதிகள் கோபமாகி, ‘‘ஒரு பிரச்னைக்காக அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போது, இதுபோன்ற முறையில் நடப்பதை ஏற்க முடியாது. அதிகபட்ச அபராதம் விதிக்க நேரிடும்.

எங்களை (நீதிபதிகளை) மிரட்டும் வகையில் உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா’’ என்றனர். பின்னர், டூவீலர் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் நம்பர் பிளேட்கள் அரசு விதிகளின் படி மட்டும் இருக்க வேண்டும். விதியை மீறி வேறு எந்த வகையிலும் எழுத்தோ, தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெறக் கூடாது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து தினமும் வாகன சோதனை நடத்த வேண்டும். விதிகளை மீறியுள்ள நம்பர்  பிளேட்களை அகற்ற வேண்டும். அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமெனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்

Related Stories: