திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 6ம் நாள் உற்சவத்தையொட்டி பிரசித்தி பெற்ற வெள்ளித் தேரோட்டம் நேற்று இரவு நடந்தது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்கள் விண்ணதிர பக்தி முழக்கமிட்டு சுவாமியை வணங்கினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும் உற்சவங்களில், அலங்கார ரூபத்தில் எழுந்தருள மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அதன்படி, தீபத்திருவிழா 6ம் நாள் உற்வசம் நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது. பின்னர், பகல் 12 மணி அளவில், காலை உற்சவம் விமரிசையாக தொடங்கியது. அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் எதிரே, 16 கால் மண்டபத்தில் இருந்து மேளதாளம் முழங்க, வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற வெள்ளித் தேரோட்டம் நேற்று இரவு நடைபெற்றது. திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாரதனை முடிந்ததும், திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என விண்ணதிர முழங்கினர். பின்னர், வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளித் தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், இந்திர விமானத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, கடந்த 1907ம் ஆண்டு வெள்ளித் தேர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்டது. அதன்படி, நூற்றாண்டு கடந்த வெள்ளித் தேர், நேற்று இரவு 115வது ஆண்டாக மாட வீதியில் பவனி வந்தது குறிப்பிடத்தக்கது.