×

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி சொத்து அபகரிப்பு, ஐகோர்ட் ஜாமீன் உத்தரவை திருத்திய பெண் கவுன்சிலர் கணவருடன் கைது; எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி போலீஸ் அதிரடி

சென்னை: தொழிலதிபரை கத்திமுனையில் கடத்தி ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீன் உத்தரவை திருத்தம் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அமர்ராம் (53), அதே பகுதியில் அடகுகடை நடத்தி வருகிறார். 2017ல் நாவலூரில் உள்ள 58 சென்ட் நிலத்தை கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.60 லட்சத்திற்கு வாங்கி உள்ளார். பிறகு 2018ல் நிலத்திற்கான முழு தொகையும் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரயம் செய்துள்ளார். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது சகோதரர் மனோகரன் என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்துள்ளது. இதனால், மனோகரன் தனது சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிலத்தை வாங்கிய தொழிலதிபர் அமர்ராம் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தொழிலதிபர் அமர்ராம் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘‘எனக்கு தெரிந்த வழக்கறிஞர் செந்தமிழ் நிலம் தொடர்பாக பேச வேண்டும் என மெரினா கடற்கரைக்கு அழைத்தார்.

அங்கு சென்ற என்னை கத்தி முனையில் மிரட்டி திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு எனக்கு நிலம் விற்பனை செய்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் கவுன்சிலரான அவரது மனைவி விமலா உள்பட 10 பேர் என்னை மிரட்டி கையெழுத்து போட வலியுறுத்தினர். நான் மறுத்ததால் எனது மனைவி மற்றும் குழந்தைகள் முன்பு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து கையெழுத்து போடவில்லை என்றால் குடும்பத்தை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். வேறு வழியின்றி, கடந்த 2017ல் அவர்களிடம் வாங்கிய தற்போது ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள நிலத்தின் கிரய ஒப்பந்தம் ரத்து சான்றிதழில் கையெழுத்து போட்டேன். பாதி வழியில் என்னை தள்ளி விட்டு ெசன்றனர். எனது சொத்தை மீட்டு தர வேண்டும்’’ என்று கூறியிருந்தார். புகாரின்படி மெரினா போலீசார் சிசிடிவி பதிவுகளுடன் விசாரணை நடத்தி மயிலாப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவியும் சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான விமலா, செந்தமிழ் உள்பட 10 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், சிறைபிடித்து சொத்துகளை அபகரித்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பிறகு உயர் நீதிமன்ற வழங்கிய நிபந்தனை ஜாமீன் உத்தரவை நேற்று எழும்பூர் 13வது நடுவர் நீதிமன்றத்தில் பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் தாக்கல் செய்து ஜாமீன் பெற முயன்றனர். அப்போது மாஜிஸ்திரேட் சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பத்த நிபந்தனை ஜாமீன் உத்தரவை படித்து பார்த்த போது, அதில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தேதி உள்ளிட்ட சில கருத்துகளை திருத்தம் செய்து, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு போன்று மற்றொரு போலியான ஒரு உத்தரவை தயாரித்து அதை எழும்பூர் 13வது நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அதிரடியாக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீன் உத்தரவை திருத்தம் செய்த பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து நடவடிக்கை எடுக்க எழும்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவுப்படி எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தம் செய்த சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி மீது மோசடி, கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக இருவரையும் கைது செய்தனர்.

Tags : Egmore Magistrate , Expropriation of Rs 25 crore property from businessman, woman councilor arrested along with her husband who amended the bail order of the court; Police action as per the order of Egmore Magistrate
× RELATED என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி...