குட்கா வியாபாரி, தனியார் குவாரிகளிடம் கோடிக்கணக்கில் வசூலித்து வரி பாக்கியை செலுத்தாததால் சொத்து, வங்கி கணக்குகள் முடக்கம்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கில் ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில் மனு

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குட்கா வியாபாரி, தனியார் குவாரி உரிமையாளர்களிடம் வசூல் என 2011 முதல் 2019வரை ரூ.342 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியுள்ள நிலையில், அதற்கான வரியை செலுத்தாததால்தான் அவரது சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறையினர் அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், புதுக்கோட்டையில் உள்ள குவாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் அவர் ரூ.342.82 கோடி அளவுக்கு பெற்றுள்ள வருமானத்துக்கு முறையாக வரி செலுத்தாமல் ரூ.206.42 கோடியை வருமான வரி பாக்கி தொகையாக  வைத்துள்ளதாகக் கூறி விஜயபாஸ்கருக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலங்கள் மற்றும் அவருடைய 4 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் வருமான வரித்துறை வரி வசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், சம்பந்தப்பட்ட குவாரிகளில் கடந்த 2017 ஏப்ரல் 7ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வரிஏய்ப்பு தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மூலம் மிகப்பெரிய அளவில் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். முடக்கப்பட்ட ஒரு வங்கிக் கணக்கில்  2022-23ம் நிதியாண்டில் அரசு, 8 லட்சத்து 50 ஆயிரத்து 226 ரூபாயை செலுத்தி உள்ளது. அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக பணம் எடுத்துள்ளார். தொகுதி பணிகளுக்காக எந்த பணத்தையும் எடுக்கவில்லை. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்து விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய குவாரியில் 2011-19 காலகட்டத்தில் ரூ.66 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 945 செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த குவாரியில் இருந்து  வருமானமாக ரூ.122 கோடியே 58 லட்சத்து 8 ஆயிரத்து 41 கிடைத்துள்ளது. தனியார்  குவாரி நிறுவனத்திடமிருந்து கடந்த 2015 முதல் 2018 வரை ரூ.85 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரத்து 765 வருமானம் வந்துள்ளது.

 

இதே காலகட்டத்தில் பான்மசாலா குட்கா உற்பத்தியாளர்களிடமிருந்து விஜயபாஸ்கருக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றபோது அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்  கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அந்த சொகுசு விடுதிகளுக்காக விஜயபாஸ்கர் ரூ.30 லட்சத்து 90 ஆயிரம் செலவழித்துள்ளார். அதேபோல ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது விஜயபாஸ்கரின் ஆதரவாளரான நயினார் முகமது என்பவரது வீட்டில் ரூ.2 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரமும்,  வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூ.15 கோடியே 46 லட்சத்து 8 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. மதிப்பீட்டின்படி அவருக்கு கிடைத்த வருமானம் மற்றும் குவாரி மூலமாக கிடைத்த வரவு-செலவு இனங்கள் மூலமாக கடந்த 2011 முதல் 2019 வரை அவர் ரூ.342 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 277க்கு முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

 

இதன் காரணமாக அவர் செலுத்த வேண்டிய வருமான வரி ரூ.206.42  கோடி பாக்கி வைத்துள்ளார். அவர் வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் அவர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியில் 20 சதவீதத்தை கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், விஜயபாஸ்கர் அந்த தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருடைய சொத்துகளும், வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.  வரி வசூலிக்க எந்த தடையும் இல்லை. விஜயபாஸ்கருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அதன் பிறகுதான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. சொத்துகளை வேறு நபர்களுக்கு விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்திற்குட்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டன. ஒரே நேரத்தில் பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த விஜயபாஸ்கர் முயற்சிக்கிறார். எனவே, விஜபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: