×

பதிவுத்துறையை சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நல நிதியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஆவண எழுத்தர்களின் நல நிதியம் உருவாக்கப்படும் என்று 2007-08ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, வணிகவரி மற்றும் பதிவு துறையால் 28.10.2010 அன்று அரசாணை வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நல நிதியத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், 2021-22ம் நிதியாண்டிற்கான பதிவுத்துறை மானிய கோரிக்கையில், பதிவுத்துறையை சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக, ஆவண எழுத்தர்களின் நல நிதியம் முழுவதுமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆவண எழுத்தர்களின் நல நிதிய சட்டம், 2022 இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, ஆவண எழுத்தர் உரிமம் பெற்ற 5,188 பேரிடம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர்களாக சேர ஒருமுறை செலுத்தப்படும் சந்தாவாக ரூ.1000 வசூலிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் ஆவணம் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10 வீதம் ஆவண எழுத்தர்களின் நல நிதியத்திற்காக வசூல் செய்யப்படும். ஆவண எழுத்தர்களின் நல நிதிய உறுப்பினர்களுக்கு, விபத்து மரணம் மற்றும் நிரந்தர ஊனத்திற்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம், இயற்கை மரணம் மற்றும் மற்ற உடல் ஊனங்களுக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரம், மாதாந்திர ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இறுதி சடங்கு நிதி, மூக்குக்கண்ணாடி உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

பதிவுத்துறை தலைவரை தலைவராகவும், இதர பதிவுத்துறை அலுவலர்களையும், ஆவண எழுத்தர் சங்கத்தில் இருந்து நியமனம் செய்யப்படும் 4 பேர் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு இந்த நல நிதியத்தை நிர்வகிக்கும். அதன்படி, ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமை செயலாளர் இறையன்பு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K.Stalin , Welfare Fund for Registry Clerks and their Families: Chief Minister M.K.Stalin Launched
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...