நிலக்கரி வரி விதிப்பு முறைகேடு சட்டீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் கைது

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்களில் வெட்டி எடுத்து, வெளியில் கொண்டு செல்லப்படும் நிலக்கரிக்கு டன்னுக்கு ரூ.25 சட்டவிரோத வரி வசூலிக்கப்பட்டதாகவும், இதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், அரசின் முக்கிய அதிகாரிகள், தொழிலதிபர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலின் அலுவலகத்தில் பணியாற்றும் துணை செயலாளர் சவுமியா சவுராசியா என்ற பெண் அதிகாரியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவரிடம் கடந்த 2 மாதத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பலமுறை விசாரணை நடத்தி உள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபரில் மாநிலத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஐஏஎஸ் அதிகாரி சமீபர் விஷ்னோயை கைது செய்தனர். ஏற்கனவே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் பாகேலிடம் அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில், ‘அமலாக்கத்துறை அதன் வரம்பை மீறி நடந்து கொள்கிறது’ என பாகேல் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: