×

உலக கோப்பை கால்பந்து 2022: ஸ்பெயின் அணிக்கு அதிர்ச்சி நாக்-அவுட் சுற்றில் ஜப்பான்: விரக்தியுடன் வெளியேறியது ஜெர்மனி

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்த ஜப்பான் இ பிரிவில் முதலிடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாலும் ,துரதிர்ஷ்டவசமாக 3வது இடம் பிடித்த ஜெர்மனி விரக்தியுடன் வெளியேறியது. இ பிரிவில் இருந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறப் போகும் 2 அணிகள் எவை என்பதில் இழுபறி நீடித்த நிலையில், 3வது மற்றும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான் (24வது ரேங்க்) - ஸ்பெயின் (7வது ரேங்க்),  ஜெர்மனி (11வது ரேங்க்) - கோஸ்டா ரிகா (31வது ரேங்க்) மோதின.

ஜப்பானுக்கு எதிராக ஸ்பெயின் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. 12வது நிமிடத்தில் அல்வரோ மொராடா கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலையும் பெற்று தந்தார். அதனால் ஏற்பட்ட பதற்றத்தில் ஜப்பான் வீரர்கள் அடுத்தடுத்து தவறு செய்து 3 பேர் மஞ்சள் அட்டை பெற்றனர். முதல் பாதி ஸ்பெயின் முன்னிலையுடன் முடிந்தது. 2வது பாதியில் ஜப்பானுக்கு அரிதாக கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பதிலி ஆட்டக்காரர் ரிட்சு டோயன் 48வது நிமிடத்திலும், ஆவ் டனகா  51வது நிமிடத்திலும்  கோலடித்து அசத்தினர்.

எல்லையை தாண்டிய பந்தை டனகா கோலாக மாற்றியதாக புகார் எழுந்தது. எனினும், வீடியோ நடுவரின் மறு ஆய்வுக்கு பிறகு அந்த கோல் ஜப்பானுக்கு உறுதியானது. ஆட்ட நேர முடிவில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பெற்றது. விறுவிறுப்பான இந்த போட்டியில், பந்து 78 சதவீத நேரம் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஜப்பான் வெறும் 14 சதவீத நேரம்தான் பந்தை தொட முடிந்தது. ஸ்பெயின் தரப்பில் 14, ஜப்பான் தரப்பில் 6 முறை கோல் நோக்கி ஷாட்கள் அடிக்கப்பட்டன. ஆனால், வெற்றியும் நாக்-அவுட் சுற்று வாய்ப்பும் ஜப்பானுக்கு வசமாகி விட, ஜெர்மனி - கோஸ்டா ரிகா மோதல் முடிவை எதிர்பார்க்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஸ்பெயின் தள்ளப்பட்டது. அந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.  

வெற்றி நெருக்கடியில் ஜெர்மனி வீரர்கள்  அலை, அலையாக கோஸ்டா ரிகா கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். சுமார் 32 முறை கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இப்போட்டியில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றாலும், இ பிரிவில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்ற நிலையில் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் ஸ்பெயின் 2வது இடம்பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. 3வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியன் ஜெர்மனி, 4வது இடம் பிடித்த கோஸ்டா ரிகா அணிகள் பரிதாபமாக வெளியேறின.

Tags : FIFA World Cup 2022 ,Spain ,Japan ,Germany , Soccer World Cup 2022: Shock for Spain in knockout round Japan: Germany exit in frustration
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!