×

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்களை ஏமாற்றி மணந்த கல்யாணராணி கைது: போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்

* 32 சிம்கார்டுகள் பயன்படுத்தியது அம்பலம்
* பல்வேறு பெயரில் சமூகவலைதள கணக்கு
* ஒரு மாதத்தில் பணம், நகையுடன் எஸ்கேப்

தாம்பர: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை, போலீசார் இரண்டாவது கணவருடன் கைது செய்தனர். மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 1வது தெருவை சேர்ந்த விஜயகுமார் - வேலம்மாள் தம்பதியின் மகன் நடராஜன் (25), கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சானடோரியம் பகுதியில் உள்ள தனியார் மாவு நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். அப்போது தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்கு அடிக்கடி மாவு பொருட்கள் டெலிவரி செய்தபோது, அங்கு வேலை செய்து வந்த அபிநயா (எ) கயல்விழி (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

நடராஜன் அபிநயாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து மதுரையில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெறும்படி அபிநயாவிடம் நடராஜன் கூறியுள்ளார். அப்போது, ‘‘தனக்கு ஊரில் உள்ள வயதில் பெரியவரான மாமாவை திருமணம் செய்து வைக்க பெற்றோர் வற்புறுத்தியதால்தான் அவர்களை பிரிந்து, சென்னையில் விடுதியில்  தங்கி வேலை செய்து வருகிறேன். பெற்றோருடன் பேச்சுவார்த்தை இல்லை,’’ என தெரிவித்துள்ளார். பின்னர், நடராஜன் தனது பெற்றோரிடம், அபிநயாவை திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அபிநயாவை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என நடராஜன் மிரட்டியுள்ளார். இதனால், நடராஜனின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து, நடராஜனுக்கும், அபிநயாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் மற்றும் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தினர். இதில், அபிநயா குடும்பத்தை சேர்ந்த எவரும் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, ஒரே வீட்டில் நடராஜன், அபிநயா, நடராஜனின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த பிறகு அபிநயா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், நடராஜன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருக்கும் அபிநயா நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, வீட்டில் நடராஜன் தனது மனைவியுடன் தனியாக இருந்துள்ளார். அப்போது, அபிநயா தீபாவளிக்காக எடுத்த புடவைக்கு பிளவுஸ் தைக்க வேண்டும் என கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கடையில் துணியை கொடுத்துவிட்டு வரும்படி கணவனை அனுப்பியுள்ளார். அதன்படி சென்ற நடராஜன் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது, கதவு மூடப்பட்டு இருந்துள்ளது.

அபிநயா அருகில் எங்காவது கடைக்கு சென்று இருப்பார் என நினைத்து நடராஜன் வீட்டில் காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் நடராஜன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே  சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த விலை உயர்ந்த திருமண புடவைகள்,  வேலம்மாளின் 17 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து நடராஜன் அபிநயாவின் இரண்டு செல்போன் எண்ணுக்கும் தொடர்பு கொண்டபோது அவை ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், நடராஜன் இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் உதவி ஆய்வாளர் கன்னியப்பன், கார்த்திகேயன், வீராசாமி  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடிவந்தனர். இந்நிலையில், செம்மஞ்சேரி அருகே உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த அவரை போலீசார் பிடித்து தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அபிநயா (எ) கயல்விழி கடந்த 2011ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். அவருடன் ஒரு மாதம் வாழ்ந்த அபிநயா, பின்னர் அவரை பிரிந்துள்ளார். பின்னர் 2013ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (33) என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். அவர் மூலம் அபிநயாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், 4 மாதங்களில் அபிநயா சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து அவரது செயினை அடமானம் வைத்து, அங்கு, அவருடன் கம்ப்யூட்டர் வகுப்பு படித்த பிரபு என்பவருடன் ஒரு வாரம் உல்லாச பயணமாக கேரளா சென்றுள்ளார்.

அபிநயா மாயமானது குறித்து செந்தில்குமார் சிவகங்கை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், 10 நாட்களில் போலீசார் அவரை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். பின்னர் 2018ம் ஆண்டு மீண்டும் அவர் மாயமாகி உள்ளார். மீண்டும் போலீசார் அவரை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து அங்கு வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போது அங்குள்ள பிரபல தனியார் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் பிரிவில் அபிநயா வேலை செய்து வந்தபோது மற்றொரு பிரபல தனியார் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்து வந்த உதயா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து திடீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் மீண்டும் போலீசார் அவரை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். பின்னர் மீண்டும் கடந்த 2020ம் ஆண்டு அவர் மாயமாகி உள்ளார். பின்னர், கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்தபோது, ஆட்டோ ஓட்டுனர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். சில நாட்களில் அவரிடம் இருந்தும் மாயமாகியுள்ளார்.

இதுகுறித்து கடந்த 2021ம் ஆண்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் அபிநயாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பன்னீர்செல்வம் கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் உடையவர் என்றும், தினமும் போதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து வந்ததாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் அபிநயா வேலை செய்து வந்தபோது, நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளார். அதே சமயத்தில் ஷேர் சாட், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பழனியை சேர்ந்த சூர்யா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளங்கோவன், திருச்சியை சேர்ந்த அமீன் உட்பட ஏராளமான ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.

இதில் சூர்யா, இளங்கோவன் உட்பட பலருடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சவுதியில் இருந்த அமீன், கொரோனா காலத்தில் அபிநயாவின் செலவிற்கு பலமுறை பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி நடராஜனுக்கும், அபிநயாவுக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் சவுதியில் இருந்து ஆமீன் சென்னை வந்துள்ளார். இதுகுறித்து ஷேர் சாட் மூலம் தெரிந்து கொண்ட அபிநயா நடராஜன் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் மாயமாகியுள்ளார்.

பின்னர் அமீனை நேரில் சந்தித்து நடராஜன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற நகைகளை விற்பனை செய்து அமீனுக்கு செல்போன், வாட்ச் என பல்வேறு பொருட்களை வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. அதோடு அமீனுடன் புதுச்சேரி, திருச்சி, சென்னை என பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாக சுற்றி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் அமீன் மீண்டும் வேலைக்காக சவுதி செல்ல இருந்தபோது அவருக்கு நடராஜன் வீட்டில் இருந்து எடுத்து வந்த நகையில் மூன்று சவரன் செயினை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி அமீன் சவுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர், 2வது கணவர் செந்தில்குமாருடன் சென்று அபிநயா வாழ்ந்து வந்துள்ளார். அப்போது நடராஜன் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதில் மீதமிருந்த நகைகளை செந்தில்குமாருடன் சேர்ந்து அடமானம் வைத்து, அந்த பணத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கேளம்பாக்கம் பகுதியில் தான் ஏற்கனவே தங்கி இருந்த தனியார் பெண்கள் விடுதிக்கு அவர் வந்தபோது போலீசாரிடம் அவர் பிடிபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அபிநயா மற்றும் அவரது செயல்களுக்கு உடந்தையாக இருந்த 2வது கணவர் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.36 லட்சம், எல்இடி டிவி, 20 கிராம் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

* பல ஆண்களுடன் தொடர்பு
சமூக வலைதளங்களான ஷேர் சாட், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆண்களை தேடி அவர்களுடன் பழகி பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருக்கவும், திருமணம் செய்து பணம், நகை உள்ளிட்டவையை பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவும் அபிநயா இதுவரை சுமார் 32 சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் போலீசார் அபிநயாவின் ஆதார் அட்டையை வைத்து அதன் மூலம் அவர் வாங்கிய சிம் கார்டு எண்களை ஆய்வு செய்த போது அவர் பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. 100க்கும் மேற்பட்ட ஆண்களிடம் விசாரணை நடத்தி பின்னர் அபிநயாவை போலீசார் கைது செய்தனர்.

* ஏராளமான ஐ.டி.
சமூக வலைதளங்களில் ஆண்களை ஈர்க்கும் விதமாக பல்வேறு பெயர்களில் பல்வேறு கணக்குகளை அபிநயா வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதில் குறிப்பாக திவ்யா, கயல்விழி, பால்கோவா, முதலும் முடிவும், வீர தமிழர்கள் என்ற பெயர்களில் கணக்குகள் வைத்து அதில் பல்வேறு ஆண்களுடன் அவர் சாட் செய்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

* கவர்ச்சி உடை
பலரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டும், பல ஆண்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பழகி பல்வேறு பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்த அபிநயா ஆண்களுடன் பழகும் போது தனது காந்த பார்வையால் ஈர்த்து கண்களாலே ஆண்களுடன் பேசி அவர்களை மயக்கியதாகவும், கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆண்களை தன் பக்கம் ஈர்க்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதால் பெரும்பாலானோர் அதில் மயங்கி பின்னர் ஏமாந்ததாக கூறப்படுகிறது.

* மல்டி சாட்டிங்
நடராஜனை காதலித்து வந்த போது நடராஜனுடன் வாட்சப்பிலும், மற்ற ஆண் நண்பர்களுடன் ஷேர் சாட், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் என ஒவ்வொருவருடன் ஒரு, ஒரு மணி நேரம் என ஒதுக்கி அவர்களுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் உடன் அநயாவும் நெருக்கமாக இருப்பது குறித்து தெரிந்து கொண்ட சூர்யா, இளங்கோவன் ஆகியோர் அபிநயா உடன் உண்டான நட்பை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

Tags : Kalyanarani ,Tamil Nadu ,Chennai , Kalyanarani, who cheated and married several men in various parts of Tamil Nadu including Chennai, arrested: Police investigation reveals sensational information
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...